பாலித்தீன் பை தயாரிக்கும் நிறுவன பங்குதாரரிடம் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.2¾ கோடி மோசடி செய்த 2 பேர் கைது


பாலித்தீன் பை தயாரிக்கும் நிறுவன பங்குதாரரிடம் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.2¾ கோடி மோசடி செய்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 May 2019 11:30 PM GMT (Updated: 17 May 2019 9:00 PM GMT)

திருப்பூரில் பனியன் நிறுவனங்களுக்கு பயன்படுத்தும் பாலித்தீன் பை தயாரிக்கும் நிறுவன பங்குதாரரிடம், போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.2¾ கோடி மோசடி செய்த 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் திரு.வி.க.நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ்(வயது 40). இவரும், திருப்பூர் எஸ்.ஆர். நகர் வடக்கு பகுதியை சேர்ந்த ஆனந்தவேலு(40), அவருடைய மனைவி சசிகலா ஆகியோரும் பங்குதாரர்களாக சேர்ந்து அணைக்காடு என்.ஜி.ஆர். நகரில் பனியன் நிறுவனங்களில் பயன்படுத்தும் பாலித்தீன் பை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தை ஆனந்தவேலுவும், சசிகலாவும் பார்த்து வந்துள்ளனர். நிறுவனத்தின் மேலாளராக அவினாசி செம்பியநல்லூர் அருகே கந்தம்பாளையத்தை சேர்ந்த பூபதி(39) என்பவர் பணியாற்றினார்.

இந்த நிலையில் பாலித்தீன் பை தயாரிக்கும் நிறுவனத்தின் கணக்கு விவரங்களை வெங்கடேசிடம் காட்டாமல் இருந்து வந்துள்ளனர். பின்னர் நிறுவனத்துக்கு சென்று பார்த்தபோது, ஆனந்தவேலு, சசிகலா, பூபதி ஆகியோர் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து பல லட்சம் ரூபாய் கையாடல் செய்ததுடன், நிறுவனமும் தங்களுடையது என்று கூறி வெங்கடேசை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து வெங்கடேஷ் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில் உதவி கமி‌ஷனர் சுந்தர்ராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, ஏட்டு ராஜேஷ் பிரபு ஆகியோர் இதுகுறித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஆனந்தவேலு, சசிகலா, பூபதி ஆகியோர் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.70 லட்சம் கையாடல் செய்ததும், இதே பெயரில் வேறொரு நிறுவனம் தொடங்கி போலி ஆவணங்கள் மூலமாக ரூ.2 கோடி மதிப்புள்ள எந்திரங்களையும் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதற்கு திருப்பூரை சேர்ந்த சரவணக்குமார், பிரகாஷ், முரளிதரன் ஆகியோரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஆனந்தவேலு, சசிகலா, பூபதி, சரவணக்குமார், பிரகாஷ், முரளிதரன் ஆகிய 6 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்தநிலையில் பூபதி, ஆனந்தவேலு ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.


Next Story