விபத்தில் மூளைச்சாவு அடைந்த தாயை தொடர்ந்து வாலிபரும் பலி


விபத்தில் மூளைச்சாவு அடைந்த தாயை தொடர்ந்து வாலிபரும் பலி
x
தினத்தந்தி 17 May 2019 11:30 PM GMT (Updated: 17 May 2019 11:30 PM GMT)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த தாயை தொடர்ந்து வாலிபரும் இறந்தார். திருச்சி தனியார் மருத்துமவனை நிர்வாகத்தின் மீது உறவினர்கள் சந்தேகமடைந்து போலீசில் புகார் தெரிவித்தனர்.

திருச்சி,

திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மனைவி மீரா (வயது 51). இவரது மகன் தினேஷ்குமார் (31). இவர் வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 12-ந் தேதி மீராவும், தினேஷ்குமாரும் மோட்டார் சைக்கிளில் திருச்சியில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்றனர். தினேஷ்குமார் வண்டியை ஓட்டினார். மீரா பின்னால் அமர்ந்திருந்தார். தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சுக்காம்பார் என்ற இடத்தில் சென்ற போது மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மீராவும், தினேஷ்குமாரும் படுகாயமடைந்தனர். 2 பேரும் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் திருச்சி தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த மீரா, தினேஷ்குமாரை சந்தித்தார். மேலும் தங்களது மருத்துவமனையில் குறிப்பிட்ட நபர்களுக்கு இலவச சிகிச்சை செய்ய இருப்பதாகவும், அதன்படி தங்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதாகவும், மருந்துகளுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து தாய் மற்றும் மகனை தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் தங்களது ஆம்புலன்சில் திருச்சிக்கு அழைத்து வந்தனர். மேலும் 2 பேருக்கும் சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி மீரா மூளைச்சாவு அடைந்ததாக அவரது உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்தால் பிறருக்கு பயன்படும் என மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளனர். இதனால் மீராவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன்வந்தனர். இதையடுத்து மீராவின் இருதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீராவின் உடல் உறுப்புகளை வேறு நபர்களுக்கு பொருத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தினேஷ்குமார் இறந்து விட்டதாக அவரது உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் விபத்தில் காயமடைந்த தினேஷ்குமாரும் இறந்தது அவரது உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. அவரது உடலை உறவினர்கள் யாரும் வாங்கவில்லை. உடல் உறுப்புகளை எடுப்பதற்காக மீராவையும் மூளைச்சாவு அடைந்ததாக தெரிவித்திருக்கலாம் என உறவினர்கள் கருதினர்.

இந்த நிலையில் இறந்த தினேஷ்குமாரின் உறவினர்கள் தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு ஒரு புகார் அளித்தனர். அதில் மீரா மற்றும் அவரது மகன் தினேஷ்குமார் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உடல் உறுப்புகளை எடுப்பதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2 பேரை தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் திருச்சிக்கு அழைத்து வந்திருக்கலாம் எனவும், மீராவின் உடல் உறுப்புகளை எடுத்ததில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்திருந்தனர். இந்த புகார் தொடர்பாக தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் தினேஷ்குமாரின் உடல் திருச்சி பிரேத பரிசோதனை கூடத்தில் உள்ளது. விபத்து தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயமடைந்த தாய் மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து அவரது மகனும் இறந்தது அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story