கைகாட்டியில் லாரி டயர்களை திருடி சென்ற மர்ம நபர்கள் போலீசார் விசாரணை


கைகாட்டியில் லாரி டயர்களை திருடி சென்ற மர்ம நபர்கள் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 May 2019 4:15 AM IST (Updated: 19 May 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

கைகாட்டியில் லாரி டயர்களை திருடி சென்ற மர்ம நபர்கள் போலீசார் விசாரணை.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 55). தேங்காய் வியாபாரி. தொழிலுக்கு உதவியாக இருக்க சொந்தமாக லாரி வாங்கி வைத்திருந்தார். லாரி புளிச்சங்காடு, கைகாட்டியில் ஒரு தனியார் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

லாரியின் டயர்கள் அதிகமாக தேய்மானம் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரியின் பின்பக்க சக்கரத்திற்கு ரூ.1 லட்சம் மதிப்பில் 4 புதிய டயர்களை வாங்கி பொருத்தி இருந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக லாரிக்கு எந்த ஆர்டரும் இல்லாததால் தனியார் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதேபோல அந்த தனியார் இடத்தில் பல லாரிகள், சரக்கு ஆட்டோ போன்றவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை லாரி ஓட்டுனர் லாரியை எடுக்க சென்ற போது, மாரிமுத்துவின் லாரியில் புதிதாக பொருத்தப்பட்டிருந்த பின்பக்க டயர்கள் 4-ம் காணவில்லை.

மேலும் அதே லாரியில் இருந்த ஜாக்கியை எடுத்து மர்ம நபர்கள் 4 டயர்களையும் திருடி சென்று விட்டனர். அதே போல அருகில் நின்ற லாரிகளில் தார்ப்பாய், கயிறுகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வடகாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story