அவினாசி, மங்கலம், சேவூர் பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்


அவினாசி, மங்கலம், சேவூர் பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 May 2019 11:25 PM GMT (Updated: 18 May 2019 11:25 PM GMT)

அவினாசி, மங்கலம், சேவூர் பகுதிகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 420 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டது.

அவினாசி,

அவினாசி

அவினாசி பேரூராட்சி பகுதியில் மளிகை கடை, எண்ணெய் கடைகள், பேக்கரி, ஓட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் தடை விதிக்கப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துகிறார்களா? என அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். இந்த ஆய்வில் பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். அவினாசியில் உள்ள பல்வேறு கடைகளில் நடந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட 210 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடையை மீறி பாலித்தீன் பைகளை பயன்படுத்திய வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ.21 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மங்கலம்

மங்கலம் ஊராட்சி பகுதியில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகளில் திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) கனகராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி, மங்கலம் ஊராட்சி செயலாளர் பொன்னுசாமி, ஊராட்சி பணியாளர்கள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய வியாபாரிகள் 5 பேருக்கு அபராதம் விதித்ததில் ரூ.4 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டது. மேலும் தடை விதிக்கப்பட்ட 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேவூர்

சேவூர் கைகாட்டி ரவுண்டானா, கோபி சாலை, புளியம்பட்டி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பேக்கரிகள், ஓட்டல்கள், இறைச்சி கடைகள், மளிகை கடைகளில், அவினாசி வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி லட்சுமி தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் டம்ளர்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கடைகளில் மொத்தம் 60 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.200 முதல் ரூ.1000 வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தம் ரூ.4,800 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, இந்த கடைகளில் முதன் முறையாக சோதனை நடைபெற்றதால் மிக குறைந்த அளவில் அபராதம் வசூலிக்கப்பட்டது. மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலும், விற்பனை செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story