கருத்துக்கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு: அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் எடப்பாடி பழனிசாமி பேட்டி


கருத்துக்கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு: அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 20 May 2019 11:15 PM GMT (Updated: 20 May 2019 3:22 PM GMT)

தேர்தல் கருத்துக்கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என்றும், அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றும் சேலத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம், 

சேலம் விமான நிலையத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

கேள்வி:– தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:– கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 3 தொகுதிகளில் தான் அ.தி.மு.க. வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டது. எடப்பாடி தொகுதியில் நானே தோல்வி அடைவேன் என ஊடகத்தில் பரப்பினார்கள். ஆனால் சேலம் மாவட்டத்தில் 10 இடங்களில் நாம் வெற்றி பெற்றோம். நான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இது தான் கருத்துக்கணிப்பின் நிலவரம். கருத்துக்கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு. 23–ந் தேதி (வியாழக்கிழமை) அன்று ஒட்டுமொத்த ஊடகம் சொன்னது சரியா? நாங்கள் சொன்னது சரியா? என நீங்களே சொல்லுங்கள்.

தமிழகத்தை பொறுத்துத்தான் நான் பேசுகிறேன். மற்ற மாநிலத்தைப்பற்றி எனக்கு தெரியாது. தமிழகத்தினுடைய நிலவரம் தான் எங்களுக்கு தெரியும். தமிழகத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க. கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

அதாவது தமிழகத்தில் 38 தொகுதிகளிலும், புதுச்சேரி ஒரு தொகுதியிலும் என மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

கேள்வி:– ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பொறுத்தவரைக்கும் விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு இருக்கிறது. இதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

பதில்:– விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு அனுமதிக்காது. நாங்கள் மத்திய அரசிடம் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோம். எதிர்க்கட்சிகள் ஏதாவது ஒரு போராட்டத்தை கையில் எடுக்கிறார்கள். அப்படி எடுத்தால் தான் மக்களிடத்தில் தாங்கள் இருப்பதை அவர்கள் காண்பிக்க முடியும்.

கேள்வி:– சேலம்–சென்னை 8 வழிச்சாலையால் விவசாயம் பாதிப்பது குறித்து?

பதில்:– சாலையால் எப்படி விவசாயம் பாதிக்கும். சாலைகள் இல்லாமல் எப்படி போகமுடியும். தி.மு.க. ஆட்சியில் 786 கிலோ மீட்டர் சாலைகள் போடப்பட்டது. அப்போது எல்லாம் விவசாயம் பாதிக்கவில்லையா? இந்த சாலைகள் எல்லாம் எப்படி போட்டார்கள். அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு சாலைகள் அமைக்க வேண்டும். அப்போது தான் விபத்துகள் குறையும். குறைந்த நேரத்தில் பயணம் செய்ய முடியும். அதுமட்டுமல்ல தொழில் வளம் பெருக வேண்டும் என்றால் சாலை வசதிகள் அவசியம். அன்றைக்கு 1 லட்சம் வாகனம் என்று சொன்னால் இப்போது, அதே சாலையில் 4 லட்சம் வாகனங்கள் செல்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, மக்கள் சிந்திக்க வேண்டும். இப்போது சாலை போட ஆரம்பித்தால் தான் பணிகள் முடிவடைய 5 அல்லது 6 ஆண்டுகள் ஆகும். அப்போது, 6 லட்சம் வாகனங்களாக உயர்ந்துவிடும்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் அரசு கணக்கிட்டு அதற்கேற்ப சாலை அமைக்கிறது. இதன்மூலம் எரிபொருள் சிக்கனப்படுத்த முடியும். இதையெல்லாம் அரசாங்கம் அறிந்து, மக்களுடைய நன்மையை கருதி சாலை அமைக்கப்படுகிறது. இதில் மக்களுக்குத்தான் நன்மை கிடைக்கிறது.

கேள்வி:– இழப்பீடு தொகை போதாது என்கிறார்கள்?

பதில்:– எவ்வளவு நிலம் இருக்கிறது? எவ்வளவு வறட்சியான பகுதி? எவ்வளவு பாசனப்பகுதி? என கணக்கிட்டு தான் இழப்பீடு கொடுக்கிறார்கள். பாசன பகுதிகளுக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். வறட்சியான பகுதியில் உள்ளவர்கள் தான் போராட்டம் நடத்துகிறார்கள். இதில் 100 சதவீதத்தில் 7 சதவீதம் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆகவே நாட்டினுடைய நலன் கருதி அனைவரும் மனமுவந்து நிலத்தை வழங்கினால் நன்றாக இருக்கும்.

கேள்வி:– மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார். மத்திய மந்திரி இலாகா எல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கிறார் என சொல்கிறார்களே?

பதில்:– நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும். அவருடைய குணத்தை நீங்களே புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் ஒரே நிலைப்பாடு தான். ஜெயலலிதா இருக்கிற காலத்தில் இருந்து, தொடர்ந்து அப்படி தான் நாங்களும் கடைபிடித்து கொண்டிருக்கிறோம். ஆனால், தி.மு.க.வின் நிலைப்பாட்டை நீங்களே சொல்லி இருக்கிறீர்கள். எனவே, அடிக்கடி நிறம் மாறக்கூடியவர்கள். ஒரு நிலையான எண்ணம் கொண்டவர்கள் அல்ல. அந்த கட்சியை பொறுத்தவரைக்கும் காலத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றி கொள்வார்கள்.

கேள்வி:– பா.ஜ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம் பெறுமா?

பதில்:– தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. அதற்கு பிறகு சிந்திக்க வேண்டும்.

கேள்வி:– குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:– பருவமழை பொய்த்த காரணத்தினாலே, மழை அளவு குறைந்த காரணத்தினாலே இன்றைக்கு பல்வேறு இடங்களில் வறட்சி ஏற்பட்டு இருக்கிறது. வறட்சி வந்தால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பாகவே அதிகாரிகளிடம் பேசி ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது.

கேள்வி:– ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேர் விடுதலை குறித்து?

பதில்:– 7 பேர் விடுதலை ஆக வேண்டும் என்பதற்காகத்தான் அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருக்கிறது. எனவே, அரசை பொறுத்தவரைக்கும் அந்த 7 பேர் விடுதலை ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்பட்டு, கவர்னருக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கவர்னர் தான் முடிவெடுக்க வேண்டும்.

கேள்வி:– சென்னைக்கு குடிநீர் ரெயில் மூலம் சப்ளை செய்யப்படுமா?

பதில்:– தற்போது அந்த நிலை இல்லை. அங்கு சுற்றுவட்டாரத்தில் இருக்கிற கிணறுகள் வாயிலாகவும், குவாரிகளில் இருக்கின்ற தண்ணீரை எடுத்து சுத்தப்படுத்தியும், இன்றைக்கு போதுமான அளவிற்கு சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கி கொண்டிருக்கிறோம். இன்னும் கூடுதலாக தண்ணீர் தேவைப்பட்டால் அரசு உயர் அதிகாரிகளை அழைத்து பேசி குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு என்ன வழிவகை செய்ய முடியுமோ, அத்தனையும் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story