கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு - வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுரை


கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு - வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுரை
x
தினத்தந்தி 20 May 2019 10:30 PM GMT (Updated: 20 May 2019 7:46 PM GMT)

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.

கோத்தகிரி,

ஆண்டுதோறும் கோடை காலத்தில் குஞ்சப்பனை கிராமப் பகுதியில் பலாப்பழ சீசன் தொடங்கும். இதையடுத்து பலா மரங்களில் காய்த்துள்ள பலாப் பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிடுவது வழக்கம்.

கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பலா மரங்களில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதையொட்டி பலாப்பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக இப்பகுதிக்கு வந்து முகாமிட்டு உள்ளன. இதனால் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையிலும், அதன் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களிலும் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

இவ்வாறு வரும் காட்டு யானைகள் மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலை மற்றும் சாலையோரங்களில் கூட்டமாக நிற்கின்றன. இதனை கவனிக் காமல் வாகனங்களை இயக்கும் போது அவை மிரண்டு வாகனங்களை தாக்கி சேதப்படுத்தி வருகின்றன.

கோத்தகிரி அருகே உள்ள தட்டப்பள்ளம் மற்றும் மாமரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களிலும், குஞ்சப்பனை சோதனைச் சாவடி அருகேயும் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை எச்சரித்து கவனத்துடன் செல்லுமாறு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் தற் போது கோடை சீசன்தொடங்கி உள்ளதால் நாள்தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கிறார்கள். பெரும்பாலான சுற்றுலா வாகனங்கள் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை வழியாக தான் செல்கிறது. தற்போது பலாப்பழ சீசனையொட்டி குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனத்தை இயக்க வேண்டும்.

சாலையில் செல்லும்போது காட்டு யானைகளை கண்டால் அவற்றை தொந்தரவு செய்யக்கூடாது. ஒலிப்பானை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் இருந்து இறங்கி யானைகளை புகைப்படம் எடுக்கவோ, செல்போனில் ‘செல்பி‘ எடுக்கவோ கூடாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் யானைகளின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். எனவே சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளும் கவனமாக செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story