மதுரையில் பிளாட்பாரத்துக்கு கொண்டு வந்த போது செங்கோட்டை ரெயில் பெட்டி தடம் புரண்டது


மதுரையில் பிளாட்பாரத்துக்கு கொண்டு வந்த போது செங்கோட்டை ரெயில் பெட்டி தடம் புரண்டது
x
தினத்தந்தி 21 May 2019 4:34 AM IST (Updated: 21 May 2019 4:34 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் பிளாட் பாரத்துக்கு கொண்டு வந்த போது செங்கோட்டை ரெயிலின் ஒரு பெட்டி தடம்புரண்டது. இதனால் அந்த ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

மதுரை,

மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு தினசரி பகலில் 3 ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படுகின்றன. அதாவது, காலை 7.15 மணி, 11.15 மணி மற்றும் மாலை 5.15 மணி என செங்கோட்டைக்கு ரெயில் இயக்கப்படுகிறது. அதேபோல மறுமார்க்கத்தில், காலை 6.30 மணி, 11.50 மணி, மாலை 3.55 மணிக்கு மதுரைக்கு பாசஞ்சர் ரெயில் இயக்கப்படுகிறது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை 3.55 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்ட ரெயில் இரவு 7.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தது. பின்னர் பராமரிப்பு பணிக்காக ரெயில் நிலையம் அருகில் உள்ள பராமரிப்பு பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

நள்ளிரவு 2.30 மணிக்கு பணிமனையில் இருந்து பிளாட்பாரம் நோக்கி கொண்டு வரப்பட்டது. அப்போது, எதிர்பாராதவிதமாக ரெயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. உடனே ரெயில் நிறுத்தப்பட்டதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

உடனே அதிகாரிகளும், ரெயில்வே ஊழியர்களும் விரைந்து வந்து, ரெயில் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணியை மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தடம் புரண்ட ரெயில் பெட்டி மீண்டும் தண்ட வாளத்தில் வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தண்டவாளம் பிரியும் பகுதியில் வந்த போது அந்த ரெயில் பெட்டி தடம் புரண்டதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று காலை 7.15 மணிக்கு மதுரையில் இருந்து செங்கோட்டை புறப்பட வேண்டிய பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56731) சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக காலை 8.15 மணிக்கு மதுரை ரெயில்நிலையத்தில் இருந்து செங்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது.

இதுதொடர்பாக மதுரை கோட்ட என்ஜினீயரிங் மற்றும் மெக்கானிக்கல் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதேபோல, பராமரிப்பு பணிமனையில் இருந்து பிளாட்பாரத்துக்கு கொண்டு வரப்பட்ட ரெயில் பெட்டி தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.


Next Story