தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி, அம்ருத் திட்டங்களின் கீழ் ரூ.13 கோடியில் பூங்காக்கள் அமைக்கும் பணி தீவிரம்


தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி, அம்ருத் திட்டங்களின் கீழ் ரூ.13 கோடியில் பூங்காக்கள் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 21 May 2019 10:45 PM GMT (Updated: 21 May 2019 3:16 PM GMT)

தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி, அம்ருத் திட்டங்களின் கீழ் ரூ.13 கோடியில் பூங்காக்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை நகரில் உள்ள சுற்றுலா தலங்களுள் ஒன்று சிவகங்கை பூங்கா. இந்த பூங்காவில் சுதந்திரதின பொன்விழா ஆண்டின் நினைவு தூண், அறிவியல் பூங்கா, நீர்வீழ்ச்சி, நீச்சல் குளம், உல்லாச படகு சவாரி, செயற்கை நீரூற்றுகள், சிறுவர்களுக்கான ரெயில், சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டரங்கம், தொங்கு பாலம், இருக்கைகள், புல்தரைகள் உள்ளிட்டவைகள் இடம் பெற்று இருந்தன.

இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை சிவகங்கை பூங்காவில் மட்டும் ரூ.8 கோடியே 10 லட்சம் செலவில் புதுப்பொலிவு பெற உள்ளது. இதற்காக பூங்கா பூட்டப்பட்டு, தரைதளங்கள் பொக்லின் எந்திரம் மூலம் பெயர்க்கப்பட்டுள்ளன.


சிறுவர்களுக்கான புதிய ரெயில், புல்தரை, ஸ்கேட்டிங் விளையாடுவதற்கான தளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. தஞ்சை சீனிவாசபுரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் மட்டுமின்றி அம்ருத் திட்டத்தின் கீழும் ரூ.3 கோடியே 64 லட்சத்தில் பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தஞ்சை புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு முல்லை நகரில் அம்ருத் திட்டத்தின் கீழ் பெரிய அளவில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக பூங்காவை சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுடன் அமர்ந்து பேசுவதற்கு வசதியாக புல் தரை அமைக்கப்பட்டிருக்கிறது.


சிறுவர்–சிறுமிகள் விளையாடுவதற்காக ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதுபோல செயற்கை நீரூற்று, மக்கள் அமர்வதற்கு வசதியாக இருக்கைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக ஜிம் வசதியும் செய்யப்பட உள்ளது. இதேபோல அலமேலுநகர், சத்யா கிருஷ்ணாநகர், 13–வது வார்டு ராயல்சிட்டி ஆகிய பகுதிகளிலும் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் எல்லாம் விரைவில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டம், அம்ருத் திட்டம் ஆகியவற்றின் கீழ் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தஞ்சை நகரில் மக்களின் பொழுதுபோக்கு இடமாக சிவகங்கை பூங்கா திகழ்ந்தது. அந்த பூங்கா நவீன விளையாட்டு சாதனங்களுடன் புதுப்பொலிவு பெற உள்ளது. இதற்கான பணி நடைபெற்று வருகிறது. அதேபோல மக்கள் தாங்கள் வசிக்கும் இடத்தின் அருகிலேயே மாலைநேரங்களில் சிறுவர்களுடன் விளையாடி மகிழ்வதற்கு வசதியாக அம்ருத் திட்டத்தின் கீழ் பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இன்னும் பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகள் எல்லாம் முடிவடைந்த பிறகு மாநகரானது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் என்றார்.

Next Story