பெரம்பலூர்- விளாமுத்தூர் இடையே ரூ.3 கோடியில் சாலை விரிவாக்கம்


பெரம்பலூர்- விளாமுத்தூர் இடையே ரூ.3 கோடியில் சாலை விரிவாக்கம்
x
தினத்தந்தி 23 May 2019 11:00 PM GMT (Updated: 23 May 2019 7:35 PM GMT)

பெரம்பலூர்- விளாமுத்தூர் இடையே ரூ.3 கோடியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் கலெக்டர் பங்களா, சுற்றுலா மாளிகை, மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட நீதிபதிகள் குடியிருப்பு, கிரிக்கெட் மைதானம், உள்விளையாட்டரங்கம் மற்றும் மாணவிகள் விளையாட்டு விடுதி ஆகியவை விளாமுத்தூர் சாலையை ஒட்டி உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகப்பகுதியில் உள்ளன. தற்போது சுமார் ரூ.24 கோடி மதிப்பில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு 5 ஏக்கர் பரப்பில் புதிய கட்டிடங்களுடன் கூடிய வளாகம் கட்டப்பட்டுள்ளது. இப்பள்ளி ஜூன் மாதம் இறுதியில் திறக்கப்பட உள்ளது. இதனால் இந்த சாலை தற்போது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் இதே சாலையில் தனியார் தொடக்கப்பள்ளியும் இயங்கி வருகிறது. இந்த சாலை வழியாக விளாமுத்தூர், சிறுவாச்சூர் மற்றும் கல்பாடிக்கு மினி பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

விரிவாக்கம்

தற்போது விளாமுத்தூர் சாலை குறுகலாக உள்ளது. இந்த சாலையின் வழியாக மாணவ- மாணவிகள் அவர்தம் பெற்றோர் என ஏராளமானோர் பயணிக்கும் நிலை உருவாகி உள்ளது. தற்போது இந்த சாலை நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.3 கோடி மதிப்பீட்டில், 5½ மீட்டர் அகலத்திற்கு விளாமுத்தூர் கிராமம் வரை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் விளாமுத்தூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் 1 கிலோ மீட்டர் தொலைவிலான குண்டும், குழியுமாக இருந்த சாலை புதியதாக அமைக்கும் பணி ஊரகச்சாலை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story