ஓட்டேரியில் செருப்பு கம்பெனியில் தீ விபத்து


ஓட்டேரியில் செருப்பு கம்பெனியில் தீ விபத்து
x
தினத்தந்தி 24 May 2019 10:30 PM GMT (Updated: 24 May 2019 8:05 PM GMT)

ஓட்டேரியில் மின்கசிவு காரணமாக செருப்பு கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.

திரு.வி.க.நகர்,

சென்னை கொடுங்கையூர் 8-வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் அஜ்மல் (வயது 47). இவர், ஓட்டேரி புதிய பாரன்ஸ் சாலையில் ஷூ மற்றும் செருப்பு தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார்.

இங்கு ஷூ மற்றும் செருப்புகள் மொத்தமாக தயாரிக்கப்பட்டு சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கம்பெனியில் பலர் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து கம்பெனியை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று அதிகாலை 5 மணி அளவில் கம்பெனியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கம்பெனிக்குள் இருந்து கரும்புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால் அதற்குள் கம்பெனி முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. வியாசர்பாடி, சர்மா நகர் மற்றும் எஸ்பிளனேடு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 21 தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணிநேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர்.

எனினும் தீ விபத்தில் கம்பெனியில் விற்பனைக்கு தயார்நிலையில் வைத்து இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான ஷூ, செருப்பு மற்றும் அதற்கான மூலப்பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின.

இதுபற்றி ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செருப்பு குடோனில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Next Story