திருவாரூர்-காரைக்குடி இடையே ரெயில் போக்குவரத்து 7 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியது


திருவாரூர்-காரைக்குடி இடையே ரெயில் போக்குவரத்து 7 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியது
x
தினத்தந்தி 1 Jun 2019 11:00 PM GMT (Updated: 1 Jun 2019 6:22 PM GMT)

திருவாரூர்-காரைக்குடி இடையே 7 ஆண்டுகளுக்கு பிறகு ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இதனால் ரெயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

திருவாரூர்,

திருவாரூர்-காரைக்குடி ரெயில் பாதை மீட்டர்கேஜ் ரெயில் பாதையாக இருந்து வந்தது. தமிழகத்திலேயே கடைசி மீட்டர்கேஜ் பாதை என்ற நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கியது.

நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு காரணங்களால் ரெயில் பாதை அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் ரெயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதை பணிகள் நிறைவு பெற்று ரெயில் பாதுகாப்பு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக ரெயில் போக்குவரத்து தொடங்குவது குறித்து எந்தவித அறிவிப்பு இல்லாமல் இருந்தது. இதனையடுத்து ரெயில் உபயோகிப்பாளர் சங்கம், நுகர்வோர் பாதுகாப்பு மையம், வர்த்தக சங்கம் என பல்வேறு தரப்பினர் ரெயில்வே நிர்வாகத்திற்கு ரெயில் சேவையை உடனடியாக தொடங்கிட கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நிலையில் திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்து ஜூன் 1-ந் தேதி தொடங்கப்படும். 3 மாதங்களுக்கு டெமு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று திருவாரூர் ரெயில் நிலையத்தில் டெமு ரெயில் காலை 8.15 மணிக்கு கொடி அசைக்கப்பட்டு காரைக்குடிக்கு புறப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு பிறகு ரெயில் சேவை தொங்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் அந்த ரெயிலில் பயணம் செய்தனர்.

தொடக்க நிகழ்ச்சியில் ரெயில் நிலைய மேலாளர் விவேகானந்தன், நாகை எம்.பி. செல்வராசு, ரெயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பாஸ்கர், நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் ரமேஷ், விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தின் சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன.

திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பாஸ்கர் கூறுகையில், திருவாரூர்-காரைக்குடி ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த பாதையில் 72 ரெயில்வே கேட்டுகள் உள்ளன. இதில் பெரும்பாலான கேட்கீப்பர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் ரெயிலை ஒவ்வொரு கேட்டிலும் நிறுத்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே உடனடியாக கேட்கீப்பர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்றார்.

நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் ரமேஷ் கூறுகையில், டெமு ரெயிலில் கழிவறை வசதி இல்லாமல் உள்ளது. திருவாரூரில் இருந்து காரைக்குடி செல்வதற்கு 6 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளதால் பயணிகள் நலன் கருதி அவசியம் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். கேட்கீப்பர் காலி பணியிடங்களை நிரப்பி கால விரயத்தை தவிர்க்க வேண்டும். இந்த பாதையில் முன்பு இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களையும் தொடர்ந்து இயக்க வேண்டும் என்றார்.

Next Story