இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கு 5,524 விண்ணப்பங்கள்
இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு மொத்தம் 5,524 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
தேனி,
இலவச, கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை தேனி மாவட்டத்தில் 4,465 பேர் பயன் பெற்று உள்ளனர்.
இந்த 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாவட்டத்தில் 55 மெட்ரிக் பள்ளிகள், 71 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் என மொத்தம் 126 பள்ளிகளில் மொத்தம் 1,708 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. 2019-20-ம் கல்வி ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வந்தது. விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்ததை தொடர்ந்து, பள்ளிகள் வாரியாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த விவரங்கள் கல்வித்துறையால் ஒருங்கிணைக்கப்பட்டன.
இந்த திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் மொத்தம் 5 ஆயிரத்து 524 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில், 18 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதம் உள்ள விண்ணப்பங்களை கொண்டு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கை அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். ஒதுக்கீடு செய்யப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தால் அத்தகைய பள்ளிகளில் குலுக்கல் முறையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
அந்த வகையில் விண்ணப்பங்கள் குறைவாக பெறப்பட்ட பள்ளிகளில் நாளை (திங்கட்கிழமை) மாணவ, மாணவிகள் சேர்க்கை நடக்கிறது. அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் வருகிற 6-ந்தேதி குலுக்கல் முறையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
இந்த பணிகளை கல்வித்துறை அலுவலர்கள் நேரடி ஆய்வு செய்ய உள்ளனர்.
Related Tags :
Next Story