பெரம்பலூரில் ஆலங்கட்டி மழை பொதுமக்கள் மகிழ்ச்சி


பெரம்பலூரில் ஆலங்கட்டி மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 1 Jun 2019 11:00 PM GMT (Updated: 1 Jun 2019 7:27 PM GMT)

பெரம்பலூரில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் முடிந்தும் வெயில் வாட்டி வதைத்ததால் பொதுமக்கள் பலர் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். கோடை மழை பொழியுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் கடந்த 30-ந் தேதி இரவு சுமார் 1 மணி நேரம் பலத்த சூறைக்காற்றுடன், இடி, மின்னலுடன் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. பெய்து முடிந்த பிறகு மழை பெய்தற்கான அறிகுறியே தெரியவில்லை. அந்த அளவிற்கு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததே இதற்கு காரணம். இந்நிலையில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் பெரம்பலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் அதிகமாகவே இருந்தது. மாலை 5 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

தொடர்ந்து திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. இது சிறிது நேரத்தில் பலத்த இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழையாக மாறியது. ஆலங்கட்டியை சிறுவர்கள் கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர். மேலும் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது. மழையின் இடையே சூறைக்காற்றும் வீசியது. இந்த ஆலங்கட்டி மழையால் பெரம்பலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மழை பெய்யும் போது பலத்த சூறாவளி காற்று வீசியதால் பெரம்பலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் சேதமாகி கீழே விழுந்தன. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு உள்ள போக்குவரத்து சிக்னல் கம்பம் சாய்ந்தது. பெரம்பலூர் நான்கு ரோட்டில் ஒரு மரமும், பெரம்பலூர்-துறையூர் செல்லும் சாலையில் ஒரு மரமும் சாய்ந்து விழுந்தன. இதே போல் குன்னம் பகுதியிலும் ஆலங்கட்டி மழை பெய்தது. அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், பாடாலூர் பகுதியிலும் பரவலான மழை பெய்தது. 

Next Story