தமிழகத்தில் மின்வாரிய காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் கரூரில் நடந்த மாநாட்டில் தீர்மானம்


தமிழகத்தில் மின்வாரிய காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் கரூரில் நடந்த மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 9 Jun 2019 3:30 AM IST (Updated: 9 Jun 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூர்,

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கரூர் கிளையின் 10-வது மாநாடு கரூரில் நேற்று நடந்தது. இதற்கு கிளை தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். கரூர் கோட்ட தலைவர் மதியழகன் வரவேற்று பேசினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், குளித்தலை கோட்ட தலைவர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொது செயலாளர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இந்த மாநாட்டில், மின்வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிட வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை உடனே அமல்படுத்திட வேண்டும், புதிதாக தொடங்கப்பட்ட அலுவலகங்களுக்கு பகுதிநேர பணியாளர்களை நியமனம் செய்திட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

சர்வர் கோளாறை சரி செய்திட...

கரூர் மின்வட்டத்தில் கணக்கீட்டு பிரிவு கணினி பழுது மற்றும் சர்வர் கோளாறு அடிக்கடி ஏற்படுவதால் பணியாளர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இதனை சரிசெய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியே கழிவறை மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதே போல் இலங்கை தேவாலய குண்டு வெடிப்பில் பலியானோர், புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்கள், நீட் தேர்வினால் உயிரை மாய்த்த மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த மாநாட்டில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன், திருச்சி மண்டல செயலாளர் பன்னீர் செல்வம் உள்பட மின் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மின்கட்டணத்தை உயர்த்த முயற்சி?

முன்னதாக மாநில பொது செயலாளர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், மத்திய பா.ஜ.க. அரசின் கொள்கையினால் மாநில மின்வாரியங்களை பிரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் மின்சாரம் என்பது சந்தை பொருளாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது என அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால் நகர்புறங்களிலும் தற்போதும் மின்வெட்டு இருக்கிறது. எனவே மின்உற்பத்தி திட்டங்களை போர்க்கால அடிப்படையில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். ஆனால் அரசு தனியார் முதலாளிகளிடம் இருந்து மின்சாரத்தை வாங்குவதினால் மின்வாரியம் இழப்பீட்டை சந்திக்க நேரிடுகிறது. இதனால் 30 சதவீதம் கட்டணத்தை உயர்த்துவதற்கான மறைமுக முயற்சி நடக்கிறது. எனவே இதனை கைவிட வேண்டும். மின்வாரிய பகுதிநேர பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். மின்வாரியம் உள்பட அனைத்து துறைகளிலும் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும்.

Next Story