விருத்தாசலம் அருகே, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.6½ லட்சம் மோசடி
விருத்தாசலம் அருகே வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாக கூறி ரூ.6½ லட்சம் மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர்.
கடலூர்,
விருத்தாசலம் எடையூரை சேர்ந்த ரெங்கநாதன், எருமனூரை சேர்ந்த சடையன், வேப்பூர் தாலுகா மேமாத்தூரை சேர்ந்த ஆசைத்தம்பி, நெய்வேலி வாய்க்கால் மேட்டுத்தெருவை சேர்ந்த கொளஞ்சி, விழுப்புரம் மாவட்டம் எலவனாசூர் கோட்டையை சேர்ந்த ரவி ஆகிய 5 பேரும் நேற்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் ஒரு புகார் கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
விருத்தாசலம் பெரியார் நகர்(தெற்கு) அமுதம் தெருவில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவர் கத்தார் நாட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்து வருவதாகவும், அவர் மூலம் அங்கு வேலை வாங்கித் தருவதாக எங்களிடம் கூறினார். இதை உண்மை என்று நம்பிய நாங்கள் மொத்தம் ரூ.6 லட்சத்து 55 ஆயிரத்தை அந்த பெண்ணிடம் கொடுத்தோம்.
இதையடுத்து அவர் எங்களை கத்தார் நாட்டுக்கு அனுப்பி வைத்தார். அங்கு எங்களை அந்த பெண்ணின் கணவர், அவர் தங்கி இருந்த அறையிலேயே எங்களை தங்க வைத்து வேலை வாங்கித் தருவதாக கூறினார். ஆனால் எங்களுக்கு வேலை வாங்கித் தரவில்லை. சரியான முறையில் உணவும் கிடைக்காமல் பட்டினி கிடந்தோம்.
இதன் பின்னர் நாங்கள் ஊருக்கு புறப்பட்டு வந்தோம். எங்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை வாங்கிய பெண்ணிடம் சென்று வாங்கிய பணத்தை தரும்படி கேட்டோம். ஆனால் அவர் பணத்தை திருப்பி தர முடியாது. நீங்கள் திரும்பி வந்ததற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று ஆட்களை வைத்து எங்களை மிரட்டி அனுப்பிவிட்டார். எனவே எங்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்த கணவன், மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story