ஆலங்குடி அருகே அரசு பஸ் இயக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


ஆலங்குடி அருகே அரசு பஸ் இயக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 13 Jun 2019 11:00 PM GMT (Updated: 13 Jun 2019 7:54 PM GMT)

ஆலங்குடி அருகே அரசு பஸ் இயக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஆலங்குடி,

புதுக்கோட்டையில் இருந்து சம்பட்டிவிடுதி, பொன்னிகனிப்பட்டி, வாராப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் தினமும் காலை மற்றும் மாலை என 2 வேளைகளில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த அரசு டவுன் பஸ் கடந்த 3 மாத காலமாக இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

இந்நிலையில் அரசு பஸ் இயக்கப்படாததை கண்டித்து ஆலங்குடி அருகே உள்ள வாராப்பூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி முனியப்பன், சம்பட்டிவிடுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

போக்குவரத்து பாதிப்பு

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து அலுவலர் பாலு அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஆலங்குடி-ஆதனக்கோட்டை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story