பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த எதிர்ப்பு: கொடிவேரி அணையை விவசாயிகள் முற்றுகை


பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த எதிர்ப்பு: கொடிவேரி அணையை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 19 Jun 2019 11:30 PM GMT (Updated: 19 Jun 2019 8:40 PM GMT)

பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கொடிவேரி அணையை விவசாயிகள் முற்றுகையிட்டனர். போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோபி,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் எடுத்தால் கோபி பகுதியில் உள்ள தடப்பள்ளி–அரக்கன்கோட்டை பாசனம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் கோபியில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அப்போது விவசாயிகள், அதிகாரிகளிடம் கூறுகையில், ‘கொடிவேரி அணையில் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அங்கிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டால் விவசாய பாசனம் பாதிக்கப்படும். அதனால் அணையின் மேல் பகுதியில் செயல்படுத்தாமல் கீழ் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

இதனால் இந்த சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் அணையின் மேல் பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றால் ஜூன் 19–ந்தேதி (நேற்று) கொடிவேரி அணையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று விவசாயிகள் அறிவித்தனர்.

இதன்காரணமாக நேற்று காலை முதலே கோபி போலீசார் 300–க்கும் மேற்பட்டோர் கொடிவேரி அணையின் முகப்பில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் தடப்பள்ளி–அரக்கன்கோட்டை பாசன சங்க தலைவர் சுபிதளபதி தலைமையில் 500–க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை 10.30 மணி அளவில் கொடிவேரி அணைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அணையை முற்றுகையிட்டு கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோபி ஆர்.டி.ஓ. செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு வந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது விவசாயிகள் கூறுகையில், ‘பவானிசாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் கொடிவேரி அணையில் தடுக்கப்பட்டு, தடப்பள்ளி, அரக்கன் கோட்டை வாய்க்கால் மூலம் சுமார் 62 கிலோ மீட்டர் தூரத்திற்கு 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இதுதவிர ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் 75–க்கும் மேற்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் மூலம் நாள்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீரும் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் அணையில் இருந்து கூடுதலாக 2 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டால் பாசனம் முற்றிலுமாக பாதிக்கப்படும்.

ஏற்கனவே பவானிசாகர் அணையில் இருந்து கொடிவேரி அணை வரை உள்ள 30 கிலோமீட்டர் தூரத்தில் பல இடங்களில் முறையற்ற வகையில் தண்ணீர் திருட்டில் தொழிற்சாலைகள் ஈடுபட்டு வருகிறது. இதனை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் இதனை கண்காணித்து தடுக்க வேண்டும்.

மேலும் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளையும் நிறுத்த வேண்டும். இல்லையெனில் அணையின் கீழ்பகுதியில் பவானி ஆற்றில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து இந்தப்பணிகள் அணையின் மேல் பகுதியில் நடைபெற்றால் விவசாயிகள் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்’ என்றனர்.

அதற்கு ஆர்.டி.ஓ. செந்தில்குமார் ‘இதுதொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் மதியம் 12 மணி அளவில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story