கோவில்பட்டி அருகே புதுப்பெண் கொலை: தற்கொலைக்கு முயன்ற கணவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை


கோவில்பட்டி அருகே புதுப்பெண் கொலை: தற்கொலைக்கு முயன்ற கணவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை
x
தினத்தந்தி 20 Jun 2019 4:45 AM IST (Updated: 20 Jun 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே புதுப்பெண்ணை கொன்று தற் கொலைக்கு முயன்ற கணவருக்கு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் மருதையா மகன் மாரியப்பன் (வயது 28). கூலி தொழிலாளி. இவருக்கும், கோவில்பட்டி புதுக்கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ் மகள் சண்முகபிரியாவுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

மாரியப்பன் சரிவர வேலைக்கு செல்வதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அதே பகுதியில் வசித்து வரும் அவரது அக்காள் காளியம்மாள் வீட்டுக்கு சென்று பகல் வேளைகளில் சாப்பிட்டுவிட்டு இரவு நேரத்தில் மட்டும் வீட்டுக்கு வருவாராம். இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 17-ந் தேதி இரவிலும் மீண்டும் இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் சண்முகபிரியாவை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் போலீசார் தன்னை பிடித்து விடுவார்களோ என பயந்து தன்னுடைய கழுத்தையும் அறுத்துக் கொண்டு அவர் தற்கொலைக்கு முயன்றார்.

இதுகுறித்து தகவலறிந்த நாலாட்டின்புத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் மாரியப்பனுக்கு போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து சுயநினைவுக்கு வந்தபிறகு ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு அவரை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story