வெவ்வேறு விபத்துகளில், ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் சாவு


வெவ்வேறு விபத்துகளில், ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் சாவு
x
தினத்தந்தி 21 Jun 2019 10:41 PM GMT (Updated: 21 Jun 2019 10:41 PM GMT)

வெவ்வேறு விபத்துகளில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பழனி, 

பழனி நகர் 13-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 25). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று ஆட்டோவில் பழனி நகராட்சி பள்ளி அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ரவிக்குமார் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோல், வேடசந்தூர் அருகே உள்ள குட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 39). கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து புளியமரத்துக்கோட்டைக்கு சென்றார். அப்போது அங்குள்ள சாலை வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி அவர் கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச் சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சக்திவேலுக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

கொடைரோடு அருகேயுள்ள குல்லலக்குண்டு ஊராட்சி கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ராஜாமணி. அவருடைய மகன் விஜய் (வயது 24). கடந்த 17-ந்தேதி இவர் தனது அண்ணி முத்துமாரியுடன் (27) மோட்டார் சைக்கிளில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல்- மதுரை 4 வழிச்சாலையில் சந்தோஷபுரம் பிரிவு அருகே சென்றபோது, அந்தவழியாக வந்த ஒரு வாகனம் அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் படுகாயமடைந்த விஜய், முத்துமாரி ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் முத்துமாரி மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story