புதுச்சேரி போலீசாருக்கும் வாரவிடுமுறை; காவலர் பொதுநல இயக்கம் கோரிக்கை


புதுச்சேரி போலீசாருக்கும் வாரவிடுமுறை; காவலர் பொதுநல இயக்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 23 Jun 2019 4:15 AM IST (Updated: 23 Jun 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி போலீசாருக்கும் வார விடுமுறையை அமல்படுத்த வேண்டும் என புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி, போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு காவலர் பொதுநல இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி,

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி, போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா ஆகியோருக்கு காவலர் பொதுநல இயக்க பொதுச்செயலாளர் கணேசன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

புதுவை காவல்துறையின் முதுகெலும்பாக விளங்கி வருவது சிறப்பு அதிரப்படை (எஸ்.டி.எப்.) ஆகும். கண்டுபிடிக்க முடியாத குற்றவாளிகளை பிடித்து நீதிக்கு முன் நிறுத்தி காவல்துறையின் கண்ணியத்தையும், சட்டம் ஒழுங்கினையும் காப்பாற்றி வருபவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர்களுக்கு காவல்துறையில் அடிப்படை வசதிகூட செய்து கொடுக்காமல் உள்ளனர்.

அதாவது குற்றம் நடந்த உடன் செல்வதற்கு தகுந்த வாகன வசதி கிடையாது. தனியாக ஒரு இடம் கிடையாது. கம்ப்யூட்டர் வசதி கிடையாது. முத்தியால்பேட்டை காவல்நிலையத்தின் மேலே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குற்றவாளிகளை பிடிக்கும் ரகசியம் வெளியாகிறது.

இவர்களுக்கு மேலே கூறியுள்ள வசதிகளும், தனி காவல் நிலைய வசதியும் செய்து கொடுத்தால் அதிரடிப்படையில் பணிபுரிபவர்கள் மேலும் சிறப்பாக செயல்பட வசதியாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆகையால் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.

ஆந்திர மாநிலத்தில் காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை வார விடுமுறை அளிக்க உத்தரவு பிறப்பித்து அமலாகி உள்ளது. ஆந்திரா போன்ற பெரிய மாநிலத்தில் நடைமுறைப்படுத்தும்போது ஏன் சின்னமாநிலமான புதுச்சேரியில் இதை நடைமுறைப்படுத்தக்கூடாது?

காவல்துறையில் பணி ஓய்வுபெற்று நீண்டநாள் வாழ்வது கிடையாது. ஏனென்றால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதுதான் காரணம். அவர்களுக்கு ஒருநாள் ஓய்வு தேவை. ஓய்வு கொடுத்து பணி செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று ஆந்திர சர்வே கூறியுள்ளது. ஆகையால் உடனே புதுவை காவல்துறையில் வார விடுமுறையை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story