அறச்சலூரில் பரபரப்பு; மடிக்கணினி வழங்கக்கோரி மாணவ– மாணவிகள் சாலை மறியல், 60 பேர் கைது


அறச்சலூரில் பரபரப்பு; மடிக்கணினி வழங்கக்கோரி மாணவ– மாணவிகள் சாலை மறியல், 60 பேர் கைது
x
தினத்தந்தி 26 Jun 2019 4:15 AM IST (Updated: 26 Jun 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

அறச்சலூர் அரசு பள்ளிக்கூடம் அருகே மடிக்கணினி வழங்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட்ட மாணவ–மாணவிகள் 60 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அறச்சலூர்,

அறச்சலூரில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் ஏராளமான மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். தற்போது தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2017–18–ம் ஆண்டில் அந்தப்பள்ளிக்கூடத்தில் பிளஸ்–2 படித்து முடித்த மாணவ–மாணவிகளுக்கு இதுவரை மடிக்கணினி வழங்கப்படவில்லை.

இதனால் முன்னாள் மாணவ–மாணவிகள் அனைவரும் நேற்று அந்த பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் திடீரென பள்ளியின் அருகே உள்ள காங்கேயம்– பழனி ரோட்டில் அமர்ந்து மடிக்கணினி வழங்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த வழியாக வந்த லாரி, பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் மேற்கொண்டு செல்லாமல் வரிசையாக நின்றன.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அறச்சலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாலைமறியலில் ஈடுபட்ட முன்னாள் மாணவ– மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மாணவ– மாணவிகள் கூறுகையில், நாங்கள் அனைவரும் கடந்த ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தோம். அப்போது பள்ளி நிர்வாகம் சார்பில் விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. தற்போது பள்ளியில் படிக்கும் மாணவ– மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும் போது எங்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எங்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. அதனால் விரைவில் எங்களுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கும் வரை இந்த சாலை மறியல் போராட்டம் தொடரும் என்றனர்.

அதற்கு போலீசார், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆனால் இதனை மாணவ– மாணவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சாலைமறியலில் ஈடுபட்ட 60 மாணவ– மாணவிகளை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வேனில் ஏற்றப்பட்டு அந்தப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் கோபால் அந்த திருமண மண்டபத்துக்கு வந்து, மாணவ– மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர் கூறுகையில், அறச்சலூர் பள்ளியில் பிளஸ்–1, பிளஸ்–2 படிக்கும் மாணவ–மாணவிகளுக்கும், கடந்த ஆண்டு பிளஸ்–2 படித்து முடித்த மாணவ–மாணவிகளுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்று அரசு ஆணை வந்து உள்ளது. அதன்படி விரைவில் மடிக்கணினி வழங்கப்படும்.

எனவே மாணவ–மாணவிகள் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட மாணவ–மாணவிகள் சமாதானம் அடைந்தனர். அதன்பின்னர் அனைவரும் தனியார் மண்டபத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

மாணவ–மாணவிகளின் இந்த சாலைமறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story