விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம்


விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 25 Jun 2019 11:00 PM GMT (Updated: 25 Jun 2019 8:29 PM GMT)

விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங் களில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

சமயபுரம்,

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாள் பணியை 150 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும். கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

அதன்படி, மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த மனு கொடுக்கும் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணகுமார், ராஜேந்திரன் ஆகியோரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர்.

இதேபோல, பச்சைமலை பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள், துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குடிநீர் பஞ்சத்தை போக்க லாரிகளில் குடிநீர் வழங்க வேண்டும் என்பது உள்பட தங்கள் கோரிக்கைகளை மனுவாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அவர்கள் அளித்தனர்.

திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் தெய்வநீதி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அந்தநல்லூர் ஒன்றியத்தில் சங்கத்தின் ஒன்றிய தலைவர் சுப்ரமணியன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பின்னர் ஒன்றிய ஆணையர் சீனிவாசனிடம் கோரிக்கைகள் குறித்து மனு கொடுக்கப்பட்டது.

லால்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பாலா தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். லால்குடி ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரெங்கராஜிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பாலு உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் காஜாமொய்தீன் தலைமை தாங்கினார். ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் மல்லிகா போராட்டத்தினை தொடங்கி வைத்து பேசினார்.

தா.பேட்டை ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட செயலாளர் முத்துச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை குறித்து ஒன்றிய ஆணையரிடம் மனு கொடுத்தனர். மேலும் தா.பேட்டை ஒன்றியம் வாளவந்தி ஊராட்சியை சேர்ந்த தொட்டியப்பட்டி கிராமத்தினர் குடிநீர் கேட்டு ஒன்றிய ஆணையரிடம் மனு கொடுத்தனர்.

Next Story