மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பள்ளிக்கூட பால்கனி சுவர் இடிந்து விழுந்து; 3 மாணவர்கள் காயம்


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பள்ளிக்கூட பால்கனி சுவர் இடிந்து விழுந்து; 3 மாணவர்கள் காயம்
x
தினத்தந்தி 27 Jun 2019 5:00 AM IST (Updated: 27 Jun 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள பள்ளிக்கூட பால்கனி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரம் எதிரே பழமைவாய்ந்த ஆரிய வைசிய மேல்நிலைப்பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் இந்த பள்ளியில் 1 முதல் 12–ம் வகுப்பு வரை 550–க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

நேற்று காலை 8 மணியில் இருந்து பள்ளிக்கு மாணவர்கள் வரத்தொடங்கினர். இந்த நிலையில் பள்ளியின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள பால்கனி சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் மாணவர்கள் 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி காயம் அடைந்து கிடந்தனர்.

உடனே சக மாணவர்கள் ஓடிவந்து 3 பேரையும் மீட்டனர். உடனே ஒரு ஆட்டோவை அழைத்து, லேசான காயம் அடைந்த 2 பேரை ஏற்றி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

தலையில் கான்கிரீட் கல் விழுந்ததில் படுகாயம் அடைந்த மற்றொரு மாணவனை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயற்சி எடுத்தனர். அந்த நேரத்தில் மீனாட்சி அம்மன் கோவில் ஊழியர்கள் தங்கள் நிறுவாகத்திடம் உள்ள ஆம்புலன்சை அங்கு கொண்டு வந்தனர். பின்னர் மாணவனை அதில் ஏற்றிக்கொண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் விளக்குத்தூண் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பால்கனி சுவர் இடிந்து விழுந்த பகுதிக்கு வேறு மாணவர்கள் யாரும் செல்லாதபடி தடுத்து நிறுத்தினர். மேலும் மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

காயம் அடைந்த 3 மாணவர்கள் குறித்து பள்ளியில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சிலைமான் அருகே உள்ள பாசியாபுரத்தை சேர்ந்த பிளஸ்–2 மாணவரான வீரக்குமார்(வயது 17), பிளஸ்–1 மாணவர்களான பெருங்குடி நல்லூர் நடுத்தெருவை சேர்ந்த குமரவேல்பாண்டியன்(16), சாமநத்தம், மந்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேலன்(16) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் வீரக்குமாருக்கு தலையிலும், சக்திவேலனுக்கு தொடையில் எலும்பு முறிவும், குமரவேல்பாண்டியனுக்கு கை மற்றும் நாடியிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே காயம் அடைந்தவர்களுடன் படிக்கும் மாணவர்கள் பலர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, நடந்த சம்பவம் குறித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

சம்பவ இடத்தை தீயணைப்புத்துறை தென் மண்டல துணை இயக்குனர் சரவணக்குமார், மதுரை மாவட்ட தீயணைப்பு அதிகாரி கல்யாணகுமார் ஆகியோரும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பள்ளிக்கு உள்ளே வரும் போது திடீரென்று பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் சிக்கிக்கொண்டதும், மற்ற மாணவர்கள் அனைவரும் தங்கள் கையில் வைத்திருந்த பையை கீழே போட்டுவிட்டு, 3 பேரையும் மீட்க ஓடுவதும் தெளிவாக தெரிந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து தீயணைப்புத்துறை துணை இயக்குனர் சரவணக்குமார் கூறும் போது, ‘‘காயம் அடைந்த மாணவர்களை விரைவாக மீட்ட மாணவர்களை பாராட்டுகிறேன். சேதம் அடைந்துள்ள பால்கனி பகுதிக்கு மாணவர்கள் யாரும் செல்லாதவாறு, அந்த பகுதியை நிர்வாகம் பூட்டி வைத்துள்ளதாக கூறினார்கள். கட்டிடத்தில் மழைநீர் தேங்கியதால் விரிசல் ஏற்பட்டு இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’’ என்றார்.


Next Story