தானே, பால்கரில் பலத்த மழை : கல்யாணில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது


தானே, பால்கரில் பலத்த மழை : கல்யாணில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 1 July 2019 11:15 PM GMT (Updated: 1 July 2019 9:22 PM GMT)

தானே, பால்கரில் பலத்த மழை கொட்டியது. கல்யாணில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. பால்கரில் ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அம்பர்நாத்,

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக கல்யாணில் பழுதடைந்த 3 மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

மாநகராட்சியால் அபாயகரமானது என அறிவிக்கப்பட்ட இந்த கட்டிடத்தில் வசித்து வந்த குடியிருப்புவாசிகள் வீடுகளில் இருந்து ºமுன்னதாக வெளியேற்றப்பட்டனர்.

இந்தநிலையில், நேற்று பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது, அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனடியாக இதுபற்றி பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து கட்டிடத்தை பார்வையிட்டனர்.

முன்கூட்டியே வீடுகளை காலி செய்து வெளியேறி விட்டதால் அங்கு வசித்து வந்த குடியிருப்புவாசிகள் பெரும் ஆபத்தில் இருந்து தப்பியதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் தானே மாவட்டம் அம்பர்நாத் பகுதியில் உள்ள அருவியில் மூழ்கி ஒருவர் இறந்துபோனார்

பால்கரில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்தநிலையில் பால்கர் பேரிடர் மேலாண்மை குழு தலைவர் விவேகானந்த் கதம் ஆற்றங்கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக அந்த பகுதியில் ஓடும் சூர்யா, வைத்தர்ணா மற்றும் பின்ஜால் ஆறுகளை சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே மீட்பு பணிகளை மேற்கொள்ள பேரிடர் குழுவினர் தயாராக வைக்கப்பட்டுள்ளனர்.

Next Story