கெலமங்கலத்தில் பரபரப்பு ரூ.1 கோடி கேட்டு நகைக்கடை அதிபர் கடத்தல் ரூ.40 லட்சம் கொடுத்ததால் விடுவிப்பு


கெலமங்கலத்தில் பரபரப்பு ரூ.1 கோடி கேட்டு நகைக்கடை அதிபர் கடத்தல் ரூ.40 லட்சம் கொடுத்ததால் விடுவிப்பு
x
தினத்தந்தி 2 July 2019 10:00 PM GMT (Updated: 2 July 2019 9:12 PM GMT)

கெலமங்கலத்தில் ரூ.1 கோடி கேட்டு நகைக்கடை அதிபரை கடத்திய கும்பலை சேர்ந்தவர்கள், ரூ.40 லட்சம் கொடுத்ததால் அவரை விடுவித்தனர்.

ராயக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் தனியார் பள்ளி அருகில் குடியிருந்து வருபவர் குமான் ராம் (வயது 47). இவர் கெலமங்கலத்தில் நகைக்கடை வைத்துள்ளார். இவரது மகன் ‌ஷாகர் (5). இவன் ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த மாதம் 8-ந் தேதி பள்ளி சீருடை வாங்குவதற்காக மோட்டார்சைக்கிளில் குமான் ராம் கெலமங்கலத்தில் இருந்து ஓசூருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது டி.தம்மண்டரப்பள்ளி அருகில் சென்ற போது கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் அங்கு வந்தது. அதில் இருந்த 7 பேர் கொண்ட கும்பலை சேர்ந்தவர்கள், கத்தியை காட்டி மிரட்டி குமான் ராமை காரில் கடத்தி சென்றனர். மேலும் அவரது மோட்டார்சைக்கிளையும் எடுத்து சென்றனர். அவரை பைரமங்கலம், ஒன்னல்வாடி, ஜொனபண்டா, மதகொண்டப்பள்ளி வழியாக அந்த பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

ரூ.1 கோடி கேட்டு கடத்தல்

அங்கு குமான் ராமிடம் ரூ.1 கோடி கேட்டு அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மிரட்டினர். இதையடுத்து குமான் ராம் தனது தம்பி மீராமாசை போனில் தொடர்பு கொண்டு ரூ.40 லட்சத்தை கொண்டு வரச் சொன்னார். அதன்படி அவரும் ரூ.40 லட்சம் கொண்டு வந்தார். அந்த பணத்தை பெற்றுக் கொண்ட அந்த கும்பலை சேர்ந்தவர்கள், குமான் ராமை விடுவித்தது. இது பற்றி யாரிடமும் தெரிவித்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார்கள். இதனால் குமான்ராம் யாரிடமும் தகவல் கூறாமல் இருந்தார்.

இந்த நிலையில் குமான்ராம் நேற்று இது குறித்து கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கடத்தல் கும்பலை தேடி வருகிறார்கள். ரூ.1 கோடி கேட்டு நகைக்கடை அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story