மேட்டூரில் வெல்டிங் தொழிலாளி கொலை தலையில் காயங்களுடன் முட்புதரில் பிணம் கிடந்தது


மேட்டூரில் வெல்டிங் தொழிலாளி கொலை தலையில் காயங்களுடன் முட்புதரில் பிணம் கிடந்தது
x
தினத்தந்தி 5 July 2019 11:00 PM GMT (Updated: 5 July 2019 2:10 PM GMT)

மேட்டூரில் வெல்டிங் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். முட்புதரில் பிணம் கிடந்தது.

மேட்டூர்,

சேலம் மாவட்டம் மேட்டூர் தேசாய் நகர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன். இவருக்கு ஒரு மகளும், 2 மகன்களும் இருந்தனர். இதில் இளைய மகன் ஹரிசிவா (வயது 19). வெல்டிங் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் முடிதிருத்தும் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு ஹரிசிவா வீட்டில் இருந்து சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நண்பர் வீட்டுக்கு சென்று இருப்பார் என நினைத்து அவருடைய வீட்டினர் இருந்து விட்டனர்.

நேற்று காலையிலும் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்து அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். ஹரிசிவாவை பற்றி விசாரித்தனர். ஆனால் அவரை பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று காலை மேட்டூர் ஆர்.எஸ்.காளியம்மன் கோவிலுக்கும், தேசாய் நகருக்கும் இடையில் உள்ள முட்புதரில் ஹரிசிவா பிணம் கிடந்தது.

இதுபற்றி அறிந்ததும் ஹரிசிவா வீட்டினர் பதறியடித்துக்கொண்டு அங்கு வந்தனர். பிணத்தை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து கருமலைக்கூடல் போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், கருமலைக்கூடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகன், மேட்டூர் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

ஹரிசிவா தலையில் தாக்கப்பட்ட காயம் இருந்தது. எனவே மர்ம நபர்கள் அவரை தலையில் கம்பியாலோ அல்லது கட்டையாலோ தாக்கி கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹரிசிவாவை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

வெல்டிங் தொழிலாளி கொலை செய்யப்பட்டு முட்புதரில் பிணம் கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story