தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து சேலம் உருக்காலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்


தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து சேலம் உருக்காலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 5 July 2019 10:45 PM GMT (Updated: 5 July 2019 2:14 PM GMT)

தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து சேலம் உருக்காலை ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சூரமங்கலம்,

இந்திய பொதுத்துறையின் செயில் நிறுவனத்துக்கு சொந்தமான சேலம் உருக்காலையில் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஏற்கனவே, உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்தநிலையில் சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கான சர்வதேச அளவிலான டெண்டர் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 1–ந் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இதற்கு உருக்காலை தொழிலாளர்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நேற்று முன்தினம் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில், உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டன. முதற்கட்டமாக நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

அதன்படி, நேற்று காலை 6 மணி முதல் உருக்காலை ஊழியர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆலையின் நுழைவு வாசல் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் ஏராளமான ஊழியர்கள் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் உருக்காலையை தனியாருக்கு விற்க டெண்டர் கோரி உள்ளதை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கையை வலியுறுத்தியும் அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

பின்னர் இதுகுறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சுரேஷ்குமார் கூறும் போது, உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். இந்தநிலையில் தனியாருக்கு விற்க டெண்டர் விடும் அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை கண்டித்து இன்று(நேற்று) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். இதனால் ஒரு நாளைக்கு ஆயிரம் டன் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன் சுமார் ரூ.10 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடும்வரை எங்களுடைய போராட்டம் தொடரும், என்றார்.


Next Story