சினிமா காட்சியை மிஞ்சும் சம்பவம்: காரில் வந்த கொள்ளை கும்பலை விரட்டி சென்று மடக்கிய போலீசார் வாலிபர் கைது


சினிமா காட்சியை மிஞ்சும் சம்பவம்: காரில் வந்த கொள்ளை கும்பலை விரட்டி சென்று மடக்கிய போலீசார் வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 July 2019 10:15 PM GMT (Updated: 6 July 2019 6:27 PM GMT)

கும்பகோணத்தில் சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் காரில் வந்த கொள்ளை கும்பலை போலீசார் விரட்டி சென்றனர். இதில் வாலிபர் ஒருவர் பிடிபட்டார். அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

கும்பகோணம்,

தமிழகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட கொள்ளை கும்பல் பல்வேறு மாவட்டங்களில் வீடுகளில் கொள்ளையடிப்பது, சாலையில் செல்வோரை மிரட்டி பணம் பறிப்பது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தது. இந்த கொள்ளை கும்பல் கும்பகோணத்தில் உள்ள சில முக்கிய பிரமுகர்களை கடத்தி பணம் பறிக்க திட்டமிடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக கும்பகோணத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து வங்கிக்கு பணம் செலுத்த சென்ற மேலாளரிடம் இருந்து ரூ.14 லட்சத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது.

இந்த நிலையில் நேற்று காலை கும்பகோணத்தை நோக்கி ஒரு கொள்ளை கும்பல் காரில் வந்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளதாக கும்பகோணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் உஷரான போலீசார் கும்பகோணத்தில் பல்வேறு இடங்களில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கும்பகோணத்தை சுற்றியுள்ள தாராசுரம், உச்சிப்பிள்ளையார் கோவில், டைமண்ட் சந்திப்பு, நால்ரோடு, மேம்பாலம் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். சில போலீசார் மாறுவேடத்திலும் வாகனங்களை கண்காணித்தனர்.

போலீசார் எதிர்பார்த்த கொள்ளை கும்பல் நேற்று மதியம் தஞ்சையில் இருந்து கும்பகோணத்தை நோக்கி 2 கார்களில் வருவதாகவும், அதில் 5-க்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட போலீசார் கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் காரை மடக்கி பிடிக்க தயாராக காத்திருந்தனர்.

இந்த நிலையில் கொள்ளை கும்பல் வந்த கார், தாராசுரம் பகுதியை கடந்து கும்பகோணம் நோக்கி அதிவேகமாக வருவதாக மாறுவேடத்தில் இருந்த போலீசார், கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் மறைந்திருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து உச்சிபிள்ளையார் கோவில் 4 முனை சந்திப்பு அருகே வைத்து கொள்ளை கும்பலை மடக்கி பிடிக்க முடிவு செய்த போலீசார், சாலையின் குறுக்கே ஸ்கூட்டர்களை நிறுத்தி காரை மறிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மின்னல் வேகத்தில் அங்கு வந்த கொள்ளையர்களின் முதல் கார், உச்சிப்பிள்ளையார்கோவில் சந்திப்பை தாண்டி சென்று விட்டது.

ஆனால் பின்னால் வந்த 2-வது காரை ஓட்டி வந்தவர் சாலையின் குறுக்கே ஸ்கூட்டர்கள் நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்து திடீரென பிரேக் போட்டு காரை நிறுத்தினார். உடனே போலீசார் காரை சுற்றி வளைத்தனர். காரில் இருந்த நாகை மாவட்டம் மயிலாடுதுறை நீடூர் பகுதியை சேர்ந்த சாதிக் பாட்சா(வயது 28) என்பவரை மடக்கி பிடித்தனர். மேலும் அவர் வைத்திருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மற்றொரு போலீஸ் படையினர் தப்பி சென்ற காரை விரட்டி சென்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கொள்ளை கும்பலை போலீசார் விரட்டி சென்ற சம்பவம் சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் இருந்தது. ஆனால் அந்த கார், போலீசாரின் பிடியில் சிக்காமல் தப்பி சென்று விட்டது. ஒரே நேரத்தில் கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதி முதல் பஸ்நிலையம் வரை சைரன் சத்தத்துடன் போலீசாரின் கார்கள் வரிசையாக வேகமாக சென்றதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிடிபட்ட சாதிக்பாட்சாவை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கும்பகோணத்தில் பட்டபகலில் காரில் வந்த கொள்ளை கும்பல் ஒன்றை பிடிக்க போலீசார் குவிக்கப்பட்டதாலும், அதன்பின்னர் நடந்த சம்பவங்களாலும் கும்பகோணம் நகரம் நேற்று மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. 

Next Story