பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் பெற 2,600 விவசாயிகள் விண்ணப்பம்


பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் பெற 2,600 விவசாயிகள் விண்ணப்பம்
x
தினத்தந்தி 11 July 2019 3:45 AM IST (Updated: 11 July 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் பெற 2,600 விவசாயிகள் விண்ணப்பங்களை அளித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தின்கீழ் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்திட ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கிடும் பொருட்டு, பட்டா நிலம் வைத்து விவசாயம் செய்து வரும் தகுதியான விவசாயிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 97 ஆயிரத்து 20 விவசாயிகளின் பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் விடுபட்ட தகுதியான அனைத்து விவசாயிகளும் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள ஏதுவாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

2,600 விவசாயிகள் விண்ணப்பம்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முகாமில் கலெக்டர் அண்ணாதுரை கலந்து கொண்டு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டார். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் காலை முதலே விவசாயிகள் வந்து தங்களது நிலத்திற்கான விவரங்களுடன், ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், ஸ்மார்ட் கார்டு (குடும்ப அட்டை) எண், அலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் விண்ணப்பங்களை அளித்தனர்.

இதே போல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் கோட்டாட்சியர் தலைமையிலும், தாசில்தார் அலுவலகங்களில் தாசில்தார் தலைமையிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கலெக்டர் அலுவலகம், 3 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், 9 தாசில்தார் அலுவலகம் மற்றும் அனைத்து கிராம நிர்வாக அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் நேற்று 2,600 பேர் விண்ணப்பங்களை அளித்தனர். இதில் பட்டுக்கோட்டை தாலுகாவில் அதிகபட்சமாக 600 பேரும், ஒரத்தநாடு தாலுகாவில் 550 பேரும் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story