களியக்காவிளை அருகே காரில் கடத்த முயன்ற 1½ டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்


களியக்காவிளை அருகே காரில் கடத்த முயன்ற 1½ டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 12 July 2019 4:30 AM IST (Updated: 11 July 2019 10:30 PM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 1½ டன் ரே‌ஷன் அரிசியை 15 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் விரட்டி சென்று மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.

அழகியமண்டபம்,

பறக்கும்படை தனி தாசில்தார் சதானந்தன் தலைமையில், துணை தாசில்தார் அருள் லிங்கம், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார், டேவிட் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்றுமுன்தினம் இரவு அழகியமண்டபம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தும்படி அதிகாரிகள் சைகை காட்டினர். ஆனால், டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள் ஜீப்பில் அந்த காரை 15 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியில் மடக்கி பிடித்தனர். உடனே டிரைவர், காரை நிறுத்தி விட்டு தப்பிஓடிவிட்டார்.

அதைதொடர்ந்து அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது, அதில் சிறு சிறு மூடைகளாக 1½ டன் ரே‌ஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், காருடன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

 பறிமுதல் செய்த ரே‌ஷன் அரிசியை காப்புக்காடு அரசு கிட்டங்கியிலும், காரை கல்குளம் தாலுகா அலுவலகத்திலும் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

அதிகாரிகளின் முதல்கட்ட விசாரணையில், ரே‌ஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. கடத்தி சென்றவர்கள் யார்? என்று பறக்கும்படை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story