வீட்டை விற்க சம்மதிக்காததால் ஆத்திரம் மனைவியை சுத்தியலால் அடித்துக்கொன்ற கணவர்


வீட்டை விற்க சம்மதிக்காததால் ஆத்திரம் மனைவியை சுத்தியலால் அடித்துக்கொன்ற கணவர்
x
தினத்தந்தி 12 July 2019 11:15 PM GMT (Updated: 12 July 2019 6:23 PM GMT)

சிறுநீரக கோளாறுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க தனது வீட்டை விற்க சம்மதிக்காததால் மனைவியை சுத்தியலால் தலையில் அடித்துக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை புளியந்தோப்பு கார்ப்பரேசன் சந்துவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 69). இவருடைய மனைவி ஜோதி(60). இவர்களுக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

ராமகிருஷ்ணன்-ஜோதி இருவரும், மனைவியை பிரிந்து வாழும் தங்களது கடைசி மகனுடன் தங்களுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தனர். ராமகிருஷ்ணனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 சிறுநீரகங்களும் பழுதானதாக தெரிகிறது. இதற்காக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் இதை விரும்பாத ராமகிருஷ்ணன், தனது பெயரில் உள்ள வீட்டை விற்று தனக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கும்படி தனது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் கூறினார்.

ஆனால் இதற்கு அவருடைய மனைவி ஜோதி சம்மதிக்கவில்லை. மீறி வீட்டை விற்றால் அதில் தான் கையெழுத்து போடமாட்டேன் எனவும் கூறினார். இது தொடர்பாக கடந்த 6-ந் தேதி நள்ளிரவில் ராமகிருஷ்ணனுக்கும், ஜோதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன், வீட்டில் இருந்த சுத்தியலால் மனைவி ஜோதியின் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். மறுநாள் காலையில், சுயநினைவு இன்றி ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜோதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுபற்றி புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே பதுங்கி இருந்த ராமகிருஷ்ணனை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான ராமகிருஷ்ணன், சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜோதி, நினைவு திரும்பாமலேயே நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து புளியந்தோப்பு போலீசார், கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story