தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,557 வழக்குகளுக்கு தீர்வு ரூ.11¼ கோடி இழப்பீடாக பெற்று தரப்பட்டது


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,557 வழக்குகளுக்கு தீர்வு ரூ.11¼ கோடி இழப்பீடாக பெற்று தரப்பட்டது
x
தினத்தந்தி 13 July 2019 11:00 PM GMT (Updated: 13 July 2019 7:34 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,557 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு, இதன் மூலம் ரூ.11 கோடியே 32 லட்சம் இழப்பீடாக பெற்று தரப்பட்டது.

திருச்சி,

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு புதுடெல்லி மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சென்னை வழிகாட்டுதலின்படி, திருச்சி கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமாகிய முரளிசங்கர் தலைமை தாங்கி, மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். திருச்சியில் 13 அமர்வுகள் உள்பட லால்குடி, துறையூர், மணப்பாறை, முசிறி என மொத்தம் 17 அமர்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

நேற்று ஒரேநாளில் 19 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மோட்டார் வாகன நஷ்ட ஈடு வழக்குகள் உள்பட 3,557 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் உரியவர்களுக்கு ரூ.11 கோடியே 32 லட்சத்து 45 ஆயிரத்து 843 இழப்பீடாக பெற்று தரப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றம் தொடக்க நிகழ்ச்சியில் அனைத்து மாவட்ட நீதிபதிகள், வக்கீல்கள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நந்தினி செய்து இருந்தார்.

முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வேலுச்சாமி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. ஓய்வு பெற்ற மாவட்ட உரிமையியல் முன்னாள் நீதிபதி மாரியாயி முன்னிலை வகித்தார். இதில் 145 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இதுபோல் துறையூர் சார்பு, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சார்பு நீதிபதி சிவக்குமார் தலைமை தாங்கினார். துறையூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆறுமுகம், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புவியரசு, துறையூர் வக்கீல் சங்கத் தலைவர் ராமசாமி, செயலாளர் தனசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மொத்தம் 209 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Next Story