நாகர்கோவில் பகுதியில் அதிக விபத்துகள் ஏற்படும் இடங்களை அதிகாரிகள் குழு ஆய்வு


நாகர்கோவில் பகுதியில் அதிக விபத்துகள் ஏற்படும் இடங்களை அதிகாரிகள் குழு ஆய்வு
x
தினத்தந்தி 17 July 2019 11:00 PM GMT (Updated: 17 July 2019 3:08 PM GMT)

நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அதிக விபத்துகள் ஏற்படும் இடங்களை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். சாலைகளை விரிவுபடுத்தலாமா? என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக விபத்துகள் ஏற்படும் இடங்களை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க அதிகாரிகள் குழுவை கலெக்டர் பிரசாந்த் வடநேரே அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

நாகர்கோவில் உதவி கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையிலான இந்த குழுவில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரி சந்திரசேகர், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், வருவாய்த்துறை, அரசு போக்குவரத்துக்கழகம், போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆய்வு

இந்தநிலையில் நேற்று காலை நாகர்கோவில் மாநகரில் அதிக விபத்துகள் நடைபெறும் பகுதிகளான வெட்டூர்ணிமடம் கட்டையன்விளை, வடசேரி பள்ளிவாசல் பகுதி, நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள பள்ளி பகுதி, ஒழுகினசேரி பாலம் அருகில் உள்ள பகுதி போன்றவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உதவி கலெக்டர் விஷ்ணு சந்திரன், வட்டார போக்குவரத்து அதிகாரி சந்திரசேகர், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் உள்பட பலதுறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

10 இடங்கள்

அப்போது எந்தெந்த பகுதியில் சாலைகளை விரிவுபடுத்தலாம்? சாலையோரத்தில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் உள்ளனவா? அவற்றை அகற்றி விட்டு சாலைகளை விரிவுபடுத்தலாமா? பள்ளிக்கு அருகாமையில் வேகத்தடை அமைக்கலாமா? பள்ளிகளுக்கு வந்து செல்லும் மாணவிகள் சாலைகளை எளிதாக கடந்து செல்ல வழிவகை ஏற்படுத்துவது எப்படி? எந்தெந்த பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கலாம்? என்பன போன்ற விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து தோவாளை திருப்பம், சுசீந்திரம் கோவில் நுழைவு வாயில் பகுதி, ராஜாக்கமங்கலத்தை அடுத்த கணபதிபுரம், ஈத்தாமொழி பகுதி, பொற்றையடி போன்ற பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நேற்று மொத்தம் 10 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு அறிக்கையை அதிகாரிகள் குழுவினர் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் ஒப்படைப்பார்கள் என்றும், அதன்பிறகு எந்தெந்த பகுதிகளில் என்னென்ன மாற்றங்களை செய்து விபத்துகள் ஏற்படாமல் தடுக்கலாம்? என்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.


Next Story