சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலா 100 தொகுதிகளில் போட்டி


சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலா 100 தொகுதிகளில் போட்டி
x
தினத்தந்தி 26 July 2019 3:59 AM IST (Updated: 26 July 2019 3:59 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலில் தலா 100 தொகுதிகளில் போட்டியிடவும், 88 தொகுதிகளை சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கவும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்து உள்ளன.

மும்பை, 

மராட்டியத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இந்தநிலையில் அடுத்த சில மாதங்களில் 288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் காங்கிரஸ் மாநில தலைவர் பாலாசாகிப் தோரட், அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரிகள் பிரிதிவிராஜ் சவான், அசோக் சவான், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் விஜய் வாடேடிவார் மற்றும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார், சஞ்சய் கோட்கே ஆகிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில் 2 கட்சிகளும் வரும் சட்டசபை தேர்தலில் தலா 100 தொகுதிகளில் போட்டியிடுவது எனவும், 88 தொகுதிகளை கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு ஒதுக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த வாரம் நடைபெற உள்ள சந்திப்பின் போது, தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

இந்த முடிவு குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியதாவது:-

2014 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மற்றும் 2-வது இடம் பிடித்த தொகுதிகளில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மீண்டும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 42 தொகுதியில் வெற்றியும், 58 இடங்களில் 2-வதும் வந்துள்ளது. எனவே அந்த 100 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும்.

தேசியவாத காங்கிரஸ் கடந்த தேர்தலில் 41-ல் வெற்றியும், 59 தொகுதிகளில் 2-வதும் வந்துள்ளது. அந்த 100 தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் போட்டியிடும்.

மீதமுள்ள 88 தொகுதிகள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நல கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story