பர்கூரில் நடுரோட்டில் உலா வந்த ஒற்றை யானை வாகன ஓட்டிகளை துரத்தியது


பர்கூரில் நடுரோட்டில் உலா வந்த ஒற்றை யானை வாகன ஓட்டிகளை துரத்தியது
x
தினத்தந்தி 28 July 2019 4:00 AM IST (Updated: 27 July 2019 11:51 PM IST)
t-max-icont-min-icon

பர்கூரில் நடுரோட்டில் உலா வந்த ஒற்றை யானை வாகன ஓட்டிகளை துரத்தியது.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டுப்பன்றி, கரடி, குரங்கு உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது போதிய மழை பெய்யாததால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி–கொடிகள் காய்ந்து கருகின. மேலும் வனக்குட்டைகளும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறுகின்றன. குறிப்பாக யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதியில் உள்ள தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதில் ஒற்றை ஆண் யானை மட்டும் அடிக்கடி கிராமப்பகுதிக்குள் புகுந்து வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை தொடர்ந்து நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

இந்தநிலையில் அந்த ஆண் யானை நேற்று காலை 8 மணி அளவில் பர்கூரில் உள்ள சாலையோரத்தில் உலா வந்தது. மேலும் சாலையோரங்களில் வளர்ந்து காணப்படும் மரக்கிளைகளை முறித்து தின்றது.

அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், யானை ஒன்று நடுரோட்டில் நிற்பதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் தங்களுடைய வாகனங்களை சற்று தொலைவில் நிறுத்திக்கொண்டனர். பின்னர் அவர்கள், அந்த யானையை தங்களுடைய செல்போனில் படம் பிடித்தனர். இதில் 2 சக்கர வாகன ஓட்டிகள் மட்டும் யானையை கடந்து செல்ல முயன்றனர். அப்போது ஆவேசமடைந்த அந்த ஆண் யானை, வாகன ஓட்டிகளை துரத்தியது.

இதனால் அவர்கள் 2 சக்கர வாகனங்களை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பர்கூர் வனத்துறையினர் அங்கு சென்று, சாலையோரத்தில் நின்ற ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து வாகன ஓட்டிகள் அங்கிருந்து சென்றனர்.


Next Story