காஞ்சீபுரத்தில் ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர் 8 மணி நேரம் காத்திருந்தனர்


காஞ்சீபுரத்தில் ஒரே  நாளில் 2 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர் 8 மணி நேரம் காத்திருந்தனர்
x
தினத்தந்தி 28 July 2019 4:00 AM IST (Updated: 28 July 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் அத்திவரதரை நேற்று ஒரே நாளில் 2½ லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்.

காஞ்சீபுரம்,

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 1-ந்தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

27-வது நாளான நேற்று அத்திவரதர் முத்து கீரிடம், இளம்பச்சை நிற பட்டாடையில், கதம்பப்பூ மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று சனிக் கிழமை விடுமுறை தினம் என்பதால் அத்திவரதரை காண கூட்டம் அலைமோதியது.

பொது தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் 5 வரிசைகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். பக்தர்கள் 3 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று சுமார் 8 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர்.

இதேபோல் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி குடும்பத்தினர், தெலுங் கானா கவர்னர் நரசிம்மன் குடும்பத்தினர், நடிகர் எஸ்.வி.சேகர் குடும்பத்தினர் ஆகியோரும் அத்திவரதரை தரிசனம் செய்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 2½ லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர்

பக்தர்கள் கூட்டத்தால் காஞ்சீபுரம் நகரம் திக்குமுக்காடியது. நகரின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அத்திவரதர் தரிசனத்திற்காக அதிகாலை 4½ மணிக்குதான் வசந்தமண்டபம் திறக்கப்படும். ஆனாலும் தினமும் நள்ளிரவு 2 மணி முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story