கோவையில், தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது - நகை, பட்டுப்புடவைகள் பறிமுதல்
கோவையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நகை, பட்டுப்புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
போத்தனூர்,
கோவை வெள்ளலூர் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் மலேசியாவில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 17-ந் தேதி இவருடைய வீட்டின் கதவு மற்றும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 1 கிலோ வெள்ளி பொருட்கள், 30 பட்டுப்புடவை, விலை உயர்ந்த எல்.இ.டி. டி.வி. உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போத்தனூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் கோவை ரத்தினபுரியை சேர்ந்த செல்லபாண்டி (வயது 42), போத்தனூரை சேர்ந்த சேக் பக்ருதீன் (42) ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் அவர்கள் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து குற்றப்பிரிவு தெற்கு உதவி கமிஷனர் ராஜ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ், ஏட்டு சாந்தாமணி மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களது வீடுகளில் வைத்து 2 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் செல்லபாண்டி, சேக் பக்ருதீன் ஆகியோர் கடந்த மாதம் 11-ந் தேதி போத்தனூர் சபரிநகர் பகுதியில் வீட்டு முன் செல்போனில் பேசி கொண்டிருந்த லலிதா (68) என்ற மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றது உள்பட பல்வேறு சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களிடம் இருந்து 12 பட்டுப்புடவை மற்றும் வெள்ளி பொருட்கள், 2 பவுன் நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story