நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தில் அடகு நகைகள் நாளை முதல் உரியவர்களிடம் ஒப்படைப்பு போலீஸ் அதிகாரி தகவல்


நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தில் அடகு நகைகள் நாளை முதல் உரியவர்களிடம் ஒப்படைப்பு போலீஸ் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 3 Aug 2019 10:15 PM GMT (Updated: 3 Aug 2019 8:09 PM GMT)

நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகைகள் நாளை முதல் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது என்றும், அடகு நகையை திரும்ப பெற மேலும் ஒரு வாரம் மனு கொடுக்கலாம் என்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துப்பாண்டி தெரிவித்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் மத்தம்பாலையை தலைமையிடமாக கொண்டு நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் கிளை நிறுவனங்கள் பளுகல், மேல்பாலை, இளஞ்சிறை மற்றும் குந்நத்துக்கல் ஆகிய 4 இடங்களில் செயல்பட்டன. இந்த நிதி நிறுவனத்தை நிர்மலன் என்பவர் நடத்தி வந்தார். இதில் குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வாடிக்கையாளர்களாக சேர்ந்து பணத்தை டெபாசிட் செய்தனர். மேலும் பலர் நகைளை அடகு வைத்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டு நிதி நிறுவனம் மூடப்பட்டது. அதன் நிர்வாகி இருந்த நிர்மலனும் தலைமறைவானார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக நாகர்கோவிலில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர். அந்த வகையில் மொத்தம் 8 ஆயிரத்து 426 புகார்கள் அளிக்கப்பட்டன. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்த ரூ.581 கோடியை மோசடி செய்து விட்டு நிர்மலன் தலைமறைவானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நிர்மலன் உள்பட மொத்தம் 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து நிர்மலன் உள்ளிட்ட சிலர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். சிலரை போலீசார் கைது செய்தனர். மேலும் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

384 பேர் விண்ணப்பம்

இதற்கிடையே நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தில் நகையை அடகு வைத்தவர்கள் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் நேற்று வரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தை அணுகி அடகு தொகையுடன் வட்டியும் சேர்த்து செலுத்தி நகையை திரும்ப பெற்று கொள்ள மனு கொடுக்கலாம் என்று போலீசார் அறிவித்தனர்.

அதன்பேரில் நகையை அடகு வைத்தவர்கள் ஏராளமானோர் உரிய ஆவணங்களை போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். அடகு தொகையை வட்டியுடன் செலுத்தியதற்கான ரசீதுகளையும் தாக்கல் செய்துள்ளனர். அடகு வைத்த 1131 பேரில் நேற்று வரை 384 பேர் மட்டுமே முறையாக வட்டியுடன் பணத்தை செலுத்தி நகைகளை திரும்பக்கேட்டு மனு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் வருவாய் அதிகாரி மூலமாக நகைகள் ஒப்படைக்கப்பட இருக்கிறது.

கால அவகாசம் நீட்டிப்பு

மேலும் விண்ணப்பிக்க வேண்டியவர்கள் ஏராளமாக இருப்பதால் அவர்களுக்கு வசதியாக மேலும் ஒரு வார காலம் அதாவது வருகிற 10-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துப்பாண்டி தெரிவித்தார்.

நாளை முதல் அடகு வைத்தவர்களுக்கு நகைகள் திரும்ப வழங்கப்பட இருப்பதால் அதைப்பார்த்து அடகு வைத்தவர்கள் நகைகளை திரும்பக்கேட்டு விண்ணப்பிக்க வருவார்கள் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story