மாவட்ட செய்திகள்

திருப்பூர் ரெயில் நிலையம் அருகே வங்கியின் 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து திருட முயற்சி; பல லட்சம் பணம் தப்பியது + "||" + Attempt to break into bank's 2 ATM machines near Tirupur railway station

திருப்பூர் ரெயில் நிலையம் அருகே வங்கியின் 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து திருட முயற்சி; பல லட்சம் பணம் தப்பியது

திருப்பூர் ரெயில் நிலையம் அருகே வங்கியின் 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து திருட முயற்சி; பல லட்சம் பணம் தப்பியது
திருப்பூர் ரெயில் நிலையம் அருகே வங்கியின் 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து மர்ம ஆசாமி திருட முயன்று முடியாமல் சென்று விட்டதால் பல லட்சம் பணம் தப்பியது.

திருப்பூர்,

திருப்பூர் ரெயில் நிலையம் அருகே ஊத்துக்குளி ரோட்டில் பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான கிளை அலுவலகம் உள்ளது. இந்த வங்கி அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் ஏ.டி.எம். மையம் உள்ளது. இதில் 4 ஏ.டி.எம். எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. பிரதான கிளை என்பதால் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த வங்கிக்கு வந்து செல்வது வழக்கம். அதுபோல் மாநகரில் எந்த நேரமும் இந்த வங்கியின் வளாகத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் இருக்கும். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பதற்கும் தினமும் அதிகமானவர்கள் வந்து செல்வார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை வங்கி வளாகத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்த 2 எந்திரங்கள் உடைக்கப்பட்டு இருந்தன. இதை அறிந்த வங்கி அதிகாரிகள் உடனடியாக திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதில் ஒரு ஏ.டி.எம். எந்திரத்தின் முன்பகுதி உடைக்கப்பட்டு இருந்தது. பணம் வைத்திருக்கும் பகுதியை மர்ம ஆசாமியால் உடைக்க முடியாததால் அப்படியே திறந்து கிடந்தன. அதுபோல் அருகில் உள்ள மற்றொரு எந்திரத்தின் முன்பகுதியும் உடைக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம். மையத்துக்கு வெளியே பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

இதில் நள்ளிரவு 1 மணி அளவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணிந்தும், தோளில் துண்டு போட்டும் வந்து ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்துவிட்டு, பணம் இருக்கும் அறையை திறக்க முடியாமல் பின்னர் அங்கிருந்து சென்றது தெரியவந்தது. இதன் காரணமாக ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்த பல லட்சம் பணம் தப்பியது. ஏ.டி.எம். மையத்துக்குள் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இதனால் கொள்ளையனை சரிவர அடையாளம் காண முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, ஏ.டி.எம். எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு முன்பு இரவு காவலர்களை நியமிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். ஆனால் இந்த ஏ.டி.எம். மையத்தில் இரவு காவலர்கள் இல்லை. வங்கி வளாக நுழைவுவாயில் கதவுகளை இரவில் பூட்டியுள்ளனர். இருப்பினும் மர்ம ஆசாமி சுவர் ஏறி குதித்து வந்து ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளான். திருட்டு முயற்சி தோல்வியடைந்ததால் அங்கிருந்து சென்றுள்ளான். கிடைத்த தடயங்களின் அடிப்படையில் மர்ம ஆசாமியை தேடி வருகிறோம் என்றனர்.

வங்கியின் பிரதான கிளை அலுவலக வளாகத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து மர்ம ஆசாமி திருட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதிகம் வாசிக்கப்பட்டவை