டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, காலி மதுபாட்டில்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்


டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, காலி மதுபாட்டில்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
x
தினத்தந்தி 5 Aug 2019 10:30 PM GMT (Updated: 5 Aug 2019 10:04 PM GMT)

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து காலி மதுபாட்டில்களுடன் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

கோவை,

கோவை மாவட்ட மக்களின் குறைகளை கேட்டு அவற்றை தீர்க்கும் வகையில் திங்கட் கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத் தில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரை முருகன் முன்னிலை வகித்தார்.

கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர். அவர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அன்னூர் அருகே உள்ள எல்லப்பாளையம் பிரிவு கணேஷபுரம் கிராம மக்கள் தமிழ் நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக்குழு தலைவர் சு.பழனிசாமி, துணைத் தலைவர் பெரியசாமி மற்றும் நிர்வாகிகளுடன் காலி மதுபாட்டில்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை திடீரென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின் கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கணேஷபுரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள சிவதங்கம் நகர் பகுதியில் விவசாய விளைநிலத்தில் டாஸ்மாக் கடை திறக்க கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இங்கு மதுக்கடை திறந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். மேலும் இந்தப் பகுதி இணைப்பு சாலைகள் கொண்ட பகுதி ஆகும்.

இந்த இடத்தில் மதுக்கடை திறக்கும்போது அடிக்கடி விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளன. அத்துடன் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ-மாணவிகளும் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும். எனவே இங்கு மதுக்கடையை திறக்கக்கூடாது என்று 3 முறை தங்களை சந்தித்து மனு கொடுத்து உள்ளோம். எனவே எங்கள் பகுதியில் மதுக்கடையை திறக்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

பாரத்சேனா சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பாரத்சேனா சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகிறோம். இதற்காக மின்வாரிய நிர்வாகம் டெபாசிட் கட்டுமாறும், அதற்கு பின்னரும் அதிக தொகையை வசூலித்து வருகிறது. எனவே இது தொடர்பாக தாங்கள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் சூலூர் அருகே உள்ள செலக்கரிசல், காமாட்சிபுரம், நொய்யல் காலனி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட ஏழை மக்கள் வீடு இல்லாமல் ஒரே வீட்டில் பலர் குடியிருந்து வருகிறார்கள். எனவே அவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

கோவையில் உள்ள அரசு உதவி பெறும் ஒரு பள்ளியை சேர்ந்த மாணவிகள் கொடுத்த மனுவில், நாங்கள் 13 பேரும் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறோம். எங்கள் பள்ளியில் படித்து வரும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவிகள் அனைவருக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் எங்களுக்கு வழங்கவில்லை. எனவே தாங்கள் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இதுதவிர முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு மனுக்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டன. மேலும் இயற்கை மரணம் அடைந்த அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பத்துக்கு கலெக்டர் ராஜாமணி நிதியுதவி வழங்கினார். அதை இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாங்கிச்சென்றனர்.

Next Story