கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்


கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2019 11:00 PM GMT (Updated: 6 Aug 2019 8:27 PM GMT)

கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை கேட்டு மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றிய அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில், 100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. போராட்டத்திற்கு முன்னாள் பேரூராட்சி தலைவர் உடையப்பன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான லாசர் போராட்டத்தை விளக்கி பேசினார். போரட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை அட்டை வைத்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலையை முழுமையாக வழங்க வேண்டும். சுழற்சி முறை எனக்கூறி வேலையை நிறுத்த கூடாது. வேலை அட்டை இல்லாதவர்களுக்கும் வேலை அட்டை வழங்க வேண்டும். சட்டப்பூர்வ கூலி ரூ.229-ஐ குறைக்காமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மனு கொடுத்தனர்

இந்த போராட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக கறம்பக்குடி தாலுகாவில் உள்ள 39 ஊராட்சிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் திரண்டு வந்த பெண்கள் அனைவரும் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நலதேவன், அமிர்தவள்ளி ஆகியோரிடம் தனித்தனியே மனு கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். மனு கொடுக்க நூற்றுக்கணக்கான பெண்கள் திடீரென குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story