தந்தை-மகன் கொலை வழக்கில் தொடர்பு: 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிபதி அனுமதி


தந்தை-மகன் கொலை வழக்கில் தொடர்பு: 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிபதி அனுமதி
x
தினத்தந்தி 8 Aug 2019 11:00 PM GMT (Updated: 8 Aug 2019 8:21 PM GMT)

தந்தை-மகன் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.

குளித்தலை,

கரூர் மாவட்டம் முதலைப்பட்டியில் ஊராட்சிக்கு சொந்தமான ஏரியில் உள்ள 39 ஏக்கர் நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்துவந்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை மீட்கக்கோரி வக்கீல் ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2016-ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் கடந்த மாதம் அரசு அதிகாரிகள் முதலைப்பட்டியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஏரியை ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதியில் விவசாயம் செய்து வந்த திருச்சி மாவட்டம், இனாம்புலியூரை சேர்ந்த வீரமலை (வயது 60), அவருடைய மகன் நல்லதம்பி (42) ஆகியோர் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிப்பகுதியை அதிகாரிகளிடம் அடையாளம் காட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஏரியை ஆக்கிரமித்தவர்கள் அவர்களை பழிவாங்க திட்டம் தீட்டியுள்ளனர்.

தந்தை-மகன் கொலை

அதன்படி கடந்த 29-ந்தேதி கரூர் மாவட்டம், முதலைப்பட்டியில் வைத்து வீரமலை மற்றும் அவரது மகன் நல்லதம்பியை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே தந்தை-மகனும் பரிதாபமாக இறந்தனர். இதுதொடர்பாக வீரமலையின் மகள் அன்னலெட்சுமி குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் 6 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த 31-ந்தேதி இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய வழக்கில் முதலைப்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாள் (35), சசிகுமார் (33), கவியரசன் (34), பிரபாகரன் (27), சண்முகம் (34), ஸ்டாலின் (22) ஆகிய 6 பேர் மதுரை ஐகோர்ட்டில் சரணடைந்தனர். மேலும் இதே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரவீன்குமார் (23) திருச்சி கோர்ட்டில் சரணடைந்தார்.

மேலும் இந்தகொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருத்தப்பட்ட தலைமறைவாக இருந்து வந்த ஜெயகாந்தனை தனிப்படை போலீசார் மதுரையில் கைது செய்தனர், பின்னர் கடந்த 3-ந்தேதி ஜெயகாந்தன் குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கொலையில் மொத்தம் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 நாட்கள் அவகாசம்

இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களும், மதுரை ஐகோர்ட்டில் சரணடைந்தவர்களுமான பெருமாள், சசிகுமார், கவியரசன், பிரபாகரன், சண்முகம், ஸ்டாலின் ஆகிய 6 பேரையும் குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் தலைமையிலான போலீசார் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.

இதுதொடர்பாக விசாரணை செய்த நீதிபதி பாக்கியராஜ், 6 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த 3 நாட்கள் அவகாசம் கொடுத்து உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணை செய்வதற்காக 6 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இந்தநிலையில் நேற்று குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், தந்தை-மகன் கொலை வழக்கில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட 6 பேர் தொடர்பாக அங்கிருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.

Next Story