மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளிவந்து திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு + "||" + Arrest of 2 youths for bail after being released on bail

ஜாமீனில் வெளிவந்து திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு

ஜாமீனில் வெளிவந்து திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு
ஜாமீனில் வெளிவந்து தொழிலாளியின் வீட்டில் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள இறவாங்குடி ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் மாதவன்(வயது 35), சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி இன்பநிலா(30). கடந்த 8-ந் தேதி காலை வழக்கம் போல் மாதவன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த இன்பநிலா மதியம் வீட்டை பூட்டி விட்டு, அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.


பின்னர் மாலையில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு இன்பநிலா அதிர்ச்சியடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் ஒரு அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் இருந்த 1 பவுன் நகை, ஒரு ஜோடி வெள்ளிக்கொலுசு ஆகியவை திருட்டு போயிருந்தது. இது குறித்து மாதவன் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஜாமீனில் வந்தவர்கள்

இந்நிலையில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மீன்சுருட்டி பகுதியில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ஒருவர் தப்பியோடிவிட்டார். மற்ற 2 பேரும் முன்னுக்கு பின், முரணாக பதிலளித்ததால் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் தஞ்சை மாவட்டம் திருகருக்காவூர் தெற்கு தெருவை சேர்ந்த தாமரைச்செல்வன்(34), காஞ்சீபுரம் மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மோகன்(28) என்பதும், தப்பியோடியவர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள உளுந்தை கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் 3 பேரும் சேர்ந்து, மாதவன் வீட்டில் நகை, வெள்ளிக்கொலுசுகள் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது. சிலை திருட்டு வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 3 பேரும், பின்னர் ஜாமீனில் வெளிவந்து கும்பகோணம் கோர்ட்டில் ஆஜராகி தினமும் கையெழுத்து போட்டு வந்ததாகவும், அவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

2 பேர் கைது

மேலும் தாமரைச்செல்வன், மோகன் ஆகியோரிடம் இருந்து, திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கடப்பாரை, நெம்புகோல், திருப்புலி, கையுறை மற்றும் மயக்கம் ஏற்படுத்தும் ஒருவகை விதைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தாமரைச்செல்வன், மோகன் ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவான ஈஸ்வரனை வலைவீசி தேடி வருகின்றனர்.