தேன்கனிக்கோட்டை, அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சுற்றித்திரிந்த காட்டு யானை - பொதுமக்கள் பீதி


தேன்கனிக்கோட்டை, அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சுற்றித்திரிந்த காட்டு யானை - பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 11 Aug 2019 10:45 PM GMT (Updated: 11 Aug 2019 8:24 PM GMT)

தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சுற்றித்திரிந்த காட்டு யானையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று நீண்ட நாட்களாக சுற்றித்திரிகிறது. இந்த யானை இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்கு விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த காட்டு யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி பட்டாளம்மன் கோவில் ஏரி வழியாக சென்று, தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் புகுந்தது. அது அப்பகுதியில் நீண்ட நேரம் சுற்றித் திரிந்தது. இதைப் பார்த்து நோயாளிகளும், பொதுமக்களும் பீதி அடைந்து ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே அந்த யானை அங்கிருந்து பட்டேல் காலனி, தொட்டி வழியாக சென்று அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் வந்தது.

இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று பட்டாசு வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அந்த யானை மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடியது.

தொடர்ந்து அச்சுறுத்தி வரும் இந்த யானையை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story