ஏரியூர் பகுதியில், காவிரி நீர்த்தேக்கத்தில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின


ஏரியூர் பகுதியில், காவிரி நீர்த்தேக்கத்தில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
x
தினத்தந்தி 12 Aug 2019 10:45 PM GMT (Updated: 12 Aug 2019 7:11 PM GMT)

மேட்டூர் அணை நிரம்பி வருவதால் ஏரியூர் காவிரி நீர்த்தேக்க பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

ஏரியூர்,

கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து அதிக அளவில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 3 லட்சம் கனஅடி தண்ணீர் வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது.

இந்தநிலையில் மேட்டூர் அணை நிரம்பி வருவதால் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் அருகே உள்ள காவிரி நீர்த்தேக்க பகுதிகளான நாகமரை, ஒட்டனூர், செல்லமுடி, சித்திரைப்பட்டி, ஏர்கோல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த கம்பு, ராகி, நெல், நிலக்கடலை, சோளம், கத்திரி, வெண்டை, அவரை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்க தொடங்கின. இதனால் விவசாயிகள் பயிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பண்ணவாடி, கோட்டையூர் இடையே படகு, பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் மேட்டூர் அணை நிரம்பி வருவதால் நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ இரட்டை கோபுரங்கள் தண்ணீரில் மூழ்கின. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Next Story