வல்லநாடு அருகே வக்கீல் கொலையில் விவசாயி கைது - கல்லூரி மாணவர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு


வல்லநாடு அருகே வக்கீல் கொலையில் விவசாயி கைது - கல்லூரி மாணவர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Aug 2019 3:45 AM IST (Updated: 13 Aug 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

வல்லநாடு அருகே வக்கீல் கொலையில் விவசாயியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம், 

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே சென்னல்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மகன் வேல்முருகன் (வயது 27), வக்கீல். இவரது எதிர் வீட்டில் வசிப்பவர் மற்றொரு சண்முகவேல் மகன் செல்வம் (29), விவசாயி. வேல்முருகனின் வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தை வேல்முருகனும், செல்வமும் உரிமை கொண்டாடினர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் நடைபெற்றது. இதில் அந்த நிலம், வேல்முருகனுக்கு சொந்தமானது என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. இதனை எதிர்த்து, செல்வம் நெல்லை கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் செல்வம் சமரச பேச்சுவார்த்தைக்கு வேல்முருகனை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு வேல்முருகன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான செல்வம் உள்ளிட்டவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

அவர்களை பிடிப்பதற்காக, முறப்பநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், ரென்னீஸ் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் நேற்று செல்வத்தை கைது செய்தனர். பின்னர் அவரை ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

மேலும் வேல்முருகன் கொலை வழக்கில் தொடர்புடைய அதே ஊரைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர், ஸ்ரீவைகுண்டம் அருகே கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மகேஷ் (25) ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story