மர்மமாக இறந்த நர்சின் உடலை வாங்க பெற்றோர் வரவில்லை பிரேத பரிசோதனை தாமதம்


மர்மமாக இறந்த நர்சின் உடலை வாங்க பெற்றோர் வரவில்லை பிரேத பரிசோதனை தாமதம்
x
தினத்தந்தி 12 Aug 2019 10:15 PM GMT (Updated: 12 Aug 2019 9:15 PM GMT)

காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற நர்சு மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை வாங்க பெற்றோர் வராததால் பிரேத பரிசோதனை தாமதமடைந்து வருகிறது.

திருச்சி,

திருச்சி மேலகல்கண்டார்கோட்டை கணேஷ்நகர் முதல் தெருவில் வசித்து வந்தவர் ஆஜிதா(வயது 26). இவர் திருச்சி மாம்பழச்சாலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். ஆஜிதாவின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதி ஆகும். ஆஜிதா இதற்கு முன்பு சென்னை கேளம்பாக்கத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு பணியாற்றிய பிரின்ஸ் என்பவருடன் காதல் ஏற்பட்டது. ஆனால், அவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் வேறு மாப்பிள்ளை பார்த்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கல்லுவிளையை சேர்ந்த ஜெகன்பாபுவுக்கும், ஆஜிதாவுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணமான ஒரே மாதத்தில் ஆஜிதா பணிக்கு சென்னை சென்றார். அங்கு தனது கணவருடன் சேர்ந்து வாழபிடிக்கவில்லை என காதலனிடம் ஆஜிதா தெரிவித்துள்ளார். அதன்பின் காதலனும், ஆஜிதாவும் ஜெகன்பாபுவை கொலை செய்ய திட்டமிட்டனர்.

பெற்றோர் வரவில்லை

கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் நாகர்கோவிலில் இருந்து ஜெகன்பாபு ரெயில் மூலம் திருச்சி வந்தபோது, ஆஜிதாவின் காதலன் பிரின்ஸ் அவரை அழைத்து சென்று ஜங்ஷன் அருகே முடுக்குப்பட்டி பகுதியில் வைத்து கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வைத்து விட்டு தப்பிச்சென்றார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆஜிதா, அவரது காதலன் பிரின்ஸ் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைதான 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

அதன்பிறகு ஆஜிதா திருச்சி பொன்மலைப்பட்டியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி, தான் தங்கியிருந்த வீட்டில் மர்மமான முறையில் ஆஜிதா இறந்து கிடந்தார். வீட்டின் மின்விசிறியில் சேலை தொங்கி கொண்டிருந்தது. அவரது உடல் அருகே விஷ மருந்து பாட்டிலும், தூக்க மாத்திரைகளும் கிடந்தது. இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஜிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆஜிதா இறந்தது குறித்து அவரது பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் யாரும் நேற்று வரை திருச்சி வரவில்லை.

உதவி கலெக்டர் விசாரணை

ஆஜிதாவின் உடலை வாங்க யாரும் வராததால் பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவரது உடலை வாங்க பெற்றோருக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது. மேலும் இறந்த ஆஜிதாவின் பெற்றோர் வயதானவர்கள் எனவும், உடல் நலக்குறைவாக இருப்பதால் திருச்சிக்கு வர முடியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் திருமணமான 3 ஆண்டுகளில் ஆஜிதா இறந்ததால் திருச்சி உதவி கலெக்டர் விசாரணை நடத்த உள்ளார். ஆஜிதாவின் காதலன் பிரின்ஸ் தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. இதனால் அவரை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் இறந்த ஆஜிதாவிற்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும், அந்த குழந்தை அவரது உறவினர் வீட்டில் வளர்ந்து வருவதாகவும், அந்த குழந்தை கணவர் ஜெகன்பாபுவிற்கு பிறந்த குழந்தை எனவும் போலீசார் தெரிவித்தனர். ஆஜிதாவின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் ஆஜிதா தற்கொலை செய்து கொண்டாரா? அவர் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியவரும் என போலீசார் கூறினர். 

Next Story