மக்கள் பிரச்சினைகளுக்காக சட்டசபை கூட்டப்படுவதில்லை - அன்பழகன் எம்.எல்.ஏ.குற்றச்சாட்டு


மக்கள் பிரச்சினைகளுக்காக சட்டசபை கூட்டப்படுவதில்லை - அன்பழகன் எம்.எல்.ஏ.குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Aug 2019 11:45 PM GMT (Updated: 12 Aug 2019 11:29 PM GMT)

அதிகாரம் யாருக்கு? என்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள். மக்களின் பிரச்சினைகளுக்காக சட்டசபை கூட்டப்படுவதில்லை. என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

சட்டமன்ற அ.தி.மு.க. குழு தலைவர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி சட்டசபையில் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அரசின் திட்ட செலவினங்களுக்காக சட்டசபையை கூட்டி எம்.எல்.ஏ.க்களின் ஒப்புதல் பெறப்பட்டது. அதற்கான காலம் இம்மாதத்துடன் முடிவு பெறுகிறது.

அதன்பின் அரசின் செலவினங்களுக்கு சட்டசபையை கூட்டி அனுமதி பெற வேண்டியது அவசியம். அதற்கு அரசு விடுமுறை நாட்கள் போக 8 தினங்களே உள்ளது. புதுச்சேரி அரசில் 38 துறைகள் உள்ளன. இந்த துறைகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கும்போது முழு விவாதம் அவசியம்.

அதுபோல் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக வார்டுகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. அதன் மீதான தவறுகள் குறித்து விவாதிக்கவே 2 தினங்கள் ஆகும். சென்டாக், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு போன்ற பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டியுள்ளது.

அரசின் வருவாயை உயர்த்தவும், செலவினங்களை குறைக்கவும் ஆலோசனை வழங்க வேண்டியுள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்புகளை வழங்காமல் சர்வாதிகார போக்கில் அரசு செயல்படுகின்றது.

மத்திய அரசின் திட்டங்களை எதிர்க்கவும், ஆட்சியில் அதிகாரம் முதல்-அமைச்சருக்கா? கவர்னருக்கா? என்பதற்காகவும் மட்டுமே சட்டமன்றம் கூட்டப்படுகிறது. மக்கள் நலன் சார்ந்த எந்த பிரச்சினைகளுக்காகவும் சட்டசபை கூட்டப்படுவது இல்லை. இதனால் புதுவைக்கு சட்டமன்றம் தேவையா? என்ற சிந்தனை மத்திய அரசுக்கு எழும் அளவுக்கு முதல்-அமைச்சரின் செயல்பாடு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story