வங்கி கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பேட்டி


வங்கி கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 19 Aug 2019 4:30 AM IST (Updated: 19 Aug 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

வங்கி கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாசலம் கூறினார்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு வங்கி நிதி வசூலிப்போர் சங்க மாநில மாநாடு தஞ்சையில் நடந்தது. மாநாட்டுக்கு சேர்மன் பொன்னுசாமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ராஜபிரகாஷ், செயலாளர் இளஞ்செழியன், தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாசலம், தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் அருணாசலம், தலைவர் வேணுகோபால், செயலாளர் சீனிவாசன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், செயலாளர் தில்லைவனம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பேட்டி

முன்னதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாசலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வங்கிகளில் சாதாரண மக்களின் சேமிப்பை சேகரிப்பதற்காக தனியாக நிதி வசூலிப்போர் திட்டம் உள்ளது. ஏழை, எளிய மக்களின் சேமிப்பு எல்லாம் வங்கிகளில் கொண்டு சேருவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் ஊழியர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்கள் நிரந்தர ஊழியர்களாக இல்லாமல் இருந்தனர். அவர்களை வங்கி நிர்வாகம் ஊழியர்களாக ஏற்று கொள்ளாமல் கமிஷன் ஏஜெண்டு போல் வைத்திருந்தனர். அதை எதிர்த்து நாங்கள் படிப்படியாக போராடியதால் அவர்களும் ஊழியர்கள் தான் என்ற சட்டப்பூர்வமான முன்னேற்றம் வந்து இருக்கிறது.

வராக்கடன் உயர்வு

ஆனால் அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படவில்லை. விடுப்பு வசதி, மருத்துவ வசதி வழங்க வேண்டும். நிரந்தர பணியாளர்களுக்கு நிகராக நிதி வசூலிப்போரிடமும் வங்கி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால் நிதி வசூலிப்போர் சங்கம் மட்டுமின்றி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கமும் இணைந்து போராடி கோரிக்கைகளை வென்றெடுப்போம்.

வங்கித்துறை நெருக்கடியில் இருக்கிறது. வராக்கடன் ரூ.15 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது. அதை வசூலிப்பதற்கு பதிலாக கடன் வாங்கி ஏமாற்றுபவர்களுக்கு சாதகமாக, தள்ளுபடி செய்ய இந்த அரசாங்கம் முடிவு எடுக்கிறது. வங்கித்துறை நாட்டின் வளர்ச்சிக்கு, விவசாய வளர்ச்சிக்கு உதவியாக இருக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகள் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு கடந்த ஆண்டு மட்டும் ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியிருக்க வேண்டும். ஆனால் நிகர லாபமாக இல்லாமல் நிகர நஷ்டமாக ரூ.66 ஆயிரம் கோடியாக உயர்ந்து இருக்கிறது.

கிரிமினல் நடவடிக்கை

இதற்கு காரணம் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் வராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. வங்கிகளில் கடன் வழங்கும் சாதாரண விவசாயிகள் கட்ட முடியவில்லை என்றால் ஏற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் கல்விக்கடன் வாங்குகிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைக்காததால் திருப்பி செலுத்தவில்லை என்றால் புரிந்து கொள்ள முடிகிறது. பெரும் முதலாளிகள் கோடிக்கணக்கான ரூபாயை கடன் வாங்கிக்கொண்டு வசதி இருந்தும் திருப்பி செலுத்துவதில்லை. அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து பணத்தை வசூலிக்க அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்களது பெயர் பட்டியலை கூட வெளியிட மறுக்கின்றனர். பெரும் முதலாளிகள் கடனை திரும்பி செலுத்தாததால் வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அந்த நஷ்டத்தை ஈடுகட்ட சாதாரண மக்களிடம் சுமையை திணிக்கின்றனர். பெரிய கடன் நிலுவையில் இருந்தால் கடன் கொடுக்கக்கூடிய தகுதி குறையும். விவசாயக்கடன், கல்விக்கடன் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. வராக்கடனை வசூலிக்காமல் வங்கிகள் வளர்ச்சி அடையாது. வங்கி வளரவில்லை என்றால் நாட்டின் பொருளாதாரம் வளராது. பொருளாதாரம் வளராமல் நாடு வளர்ச்சி அடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story