புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்


புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2019 10:45 PM GMT (Updated: 22 Aug 2019 9:26 PM GMT)

புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மேலும் புதிய கல்வி கொள்கை மாணவர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து பல்வேறு இடங்களில் மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி குமரி மாவட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

பரபரப்பு

ஆர்ப்பாட்டத்தின்போது தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க கூடாது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் மாணவ-மாணவிகள் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் பதில்சிங் தலைமை தாங்கினார். செயலாளர் பிரிஸ்சில் மற்றும் நாகர்கோவிலில் உள்ள பல்வேறு தனியார் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டம் காரணமாக அண்ணா விளையாட்டு அரங்கம் முன் பரபரப்பாக காணப்பட்டது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story